இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என சினிமாவில் பாடியதுடன் மட்டுமின்றி, நிஜ வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டியவர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.,
மறைந்து, 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்களில் மனங்களில் இன்றும் கோலோச்சி கொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர்., அவரை பற்றிய தகவல்களை எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம், படிக்கலாம்.
அவருடன், 40 ஆண்டுகளாக மெய்க்காப்பாளராக இருந்து சினிமா, அரசியலில் உடன் பயணித்தவர் கே.பி.ராமகிருஷ்ணன்.
எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட நட்பு, மெய்க்காப்பாளரானது, அவரது சினிமாக்களில் அவருக்காக டூப் போட்டது என பல்வேறு தகவல்களை சுவாரஸ்யமாக பல்வேறு நுால்களில் தந்திருக்கிறார். தற்போது இதுவரை வெளிவராத எம்.ஜி.ஆர்., குறித்த அபூர்வ தகவல்களை, 36 தலைப்புகளில் அரிய தகவல்களாகக் தந்திருக்கிறார்.
முதல்வராவதற்கு முன், ஒரு திருமண வீட்டிற்கு சென்றிருக்கிறார் எம்.ஜி.ஆர்., அங்கு லால்குடி ஜெயராமனின் வயலின் இசை நடந்து கொண்டிருந்தது.
எம்.ஜி.ஆர்., திருமண பந்தலில் நுழைந்ததும், அவரது வருகையால் சலசலப்பு ஏற்பட்டு இசை நிகழ்ச்சி தடைபட்டது. இசைக்கச்சேரியை கேட்க விரும்பிய எம்.ஜி.ஆருக்கும் ஏமாற்றத்தை தந்தது. திருமணத்தில் பங்கேற்று விட்டு உடனடியாக புறப்பட்ட எம்.ஜி.ஆர்., ஒரு கடிதத்தை உதவியாளர் சபாபதி மூலம் லால்குடி ஜெயராமனுக்கு கொடுத்து அனுப்பினார்.
அதில், ‘உங்களது நயமான இசையை ஒரு ரசிகனாக கேட்க வந்தேன். ஆனால், என் வருகையால் ஏற்பட்ட பரபரப்பில் தங்களது கச்சேரியே பாதிக்கப்பட்டது. இப்படி குறுக்கிட நேர்ந்ததற்கு மிகவும் வருந்துகிறேன்’ என, எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர்., இப்படி அரிய தகவல்களை நுாலாசிரியர் தந்திருப்பது பாராட்டுக்குரியது.
– மேஷ்பா