உயர்தனிச் செம்மொழிகள் ஆறினுள், தமிழ் முதன்மையானது எனலாம். தொல்காப்பியமே, 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனில், தமிழ் மொழியின் தொன்மைக் கால வரையறைக்குள் கொண்டு வருவது கடினமாகும்.
தமிழின் எழுத்து வடிவமும் பல மாற்றம் பெற்று வந்துள்ளது.
பல இலக்கியங்கள் ஓலைச் சுவடிகளில் இருந்து அச்சிடப்பட்டு, பலரும் படிக்கும் நிலையில் இருக்கிறது. இத்தகு பல முன்னேற்றங்களை தமிழ் மொழி பெற, தமிழ் அறிஞர்கள் பலர், தம் வாழ்நாள் முழுவதும் ஓடி உழைத்-துள்ளனர். அவர்களில் சிலரின் வரலாறு கூறுவதே இந்நுாலின் நோக்கமாகும்.
இந்நுாலில், 36 தமிழ் அறிஞர்களின் வரலாறும், அவர்களின் தமிழ்த் தொண்டும், அவர்களின் தன்னலமற்ற உழைப்பும், தமிழை அவர்கள் போற்றி, உயிரினும் மேலாகக் கருதி வளர்த்ததும் விவரிக்கப்பட்டுள்ளன.
உரைநடையில், ‘மனத்தில்’ என்றே எழுத வேண்டும்; ‘மனதில்’ என்று எழுதுவது தவறு என்று உரைத்த அறிஞர், அ.ச.ஞானசம்பந்தன், பாரதியார், கனகலிங்கத்திற்குப் பூணுால் போட்ட சமயம், அறிஞர், வா.ரா., கேட்ட வினாவிற்குப் பாரதியார் சொன்ன பதில், ‘தேவநேசக்கவிவாணன்’ என்ற பெயர், ‘தேவநேயப்பாவாணர்’ ஆனது உட்பட பல இதில் அடங்கும்.
ம.பொ.சி., கோரியபடி, தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் தமிழகத்துடன் இணைந்திருந்தால், முல்லைப் பெரியாறு பிரச்னை இன்று வந்திருக்காது என்ற கணிப்பு, copyright என்ற ஆங்கிலச் சொல்லிற்கு, ‘உரிமைச் செறிவு’ என்றும், uniform என்பதற்கு, ‘சீருடை’ என்றும் கூறிய டாக்டர் மு.வ., மகாகவி பாரதியார், ‘பலே பாண்டியா’ என்று நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையைப் பாராட்டியது.
பரிதிமாற் கலைஞர் கேட்ட வினாவிற்கு, ‘எனக்குத் தெரியாது’ என்று சரியான விடை கூறி, மறைமலையடிகள், தமிழ் ஆசிரியர் பணி பெற்றது ஆகியவை தமிழ் அறிஞர்கள் பெருமைக்கு அடையாளம்.
தவிரவும், 18 பக்கங்களில் நுாலாசிரியரின் சிறந்த முன்னுரை, நுால் முழுவதும் படிக்கத் துாண்டுகோலாக உள்ளது. தமிழர்கள், இந்நுாலைத் தவறாது படித்து மகிழலாம்.
– பேரா., டாக்டர் கலியன்சம்பத்து