தமிழ்ச் சமுதாயத்தில் பல நுாறு ஆண்டுகளாக, ஆழமாக வேரூன்றிப் புரையோடிப் போன மடமைகள், பழமைகள் ஆகியனவற்றை நகைப்புக்கு உள்ளாக்கிப் புதிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவை திராவிட இயக்க படைப்பாளிகளின் படைப்புகளும், அவர்தம் இலக்கிய ஆய்வுகளுமாகும்.
திராவிட இயக்கப் படைப்பாளர்கள் தம் படைப்புகளில் சமூக நீதி, வகுப்பு வாரி உரிமை, மொழி மானம், இன மானம், பெண்ணுரிமை, தமிழ் மொழி வளர்ச்சி, அறிவியல், பகுத்தறிவு போன்ற கோட்பாடுகளை உள்வாங்கி ஜாதி, சமய, மத வேறுபாடு களுக்கு அப்பாற்பட்டு, ஒன்றுபட்ட புதிய சகோதரத்துவச் சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியாகத் தம் படைப்புகளைப் படைத்தனர் என, நுாலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
கடந்த, 1947 துவங்கி, 1959க்கு உட்பட்ட காலங்களில் தமிழர்களிடம் படைப்பறிவையும் தாண்டிப் பத்திரிகை, நுால்கள் இவற்றை வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்த பெருமை திராவிட இயக்கப் படைப்பாளிகளின் கவிதை, வரலாறு, கட்டுரை, புதினம், தன் வரலாறு, சிறுகதை, நாடகம், கடிதம் போன்றவை என்றால் மிகையல்ல.
சுயமரியாதைச் சிந்தனைகளோடு திராவிட இனத்தை மீண்டெழச் செய்து தட்டி எழுப்பிய இலக்கிய ஆளுமைகளை கால வரிசையில் நிரல் படத் தொகுத்து தந்துள்ளார் நுாலாசிரியர்.
சமூக விஞ்ஞானி பெரியார் ஈ.வெ.ரா.,வின் சுய மரியாதைக் கருத்துக்களை நாடு முழுவதும் கொண்டு சேர்ந்த தொண்டர்களையும், அவர்தம் ஆய்வுத் தேடலையும் முறைப்படுத்தி வழங்கியுள்ளார். இருநுாறுக்கும் மேற்பட்ட இதழ்கள் வழி இயக்கக் கருத்துகளைப் பரவலாக்கிய வரலாற்றையும் பதிவு செய்துள்ளார்.
திராவிட இயக்கம் சார்ந்து இயங்கிய படைப்பாளர்களை முன் நிறுத்தியதோடு, அவர்கள் வழி வெகுஜன ஊடகமான திரைப்படம் வாயிலாக படங்கள் உரையாடல்கள் மூலம் சுயமரியாதை கருத்துகள் நிரம்பிய பெரும் புரட்சியை முன்னெடுத்து, சமூகம் மாற முயற்சி மேற்கொண்டதை இந்நுால் தெளிவுபட உணர்த்துகிறது.
– புலவர் சு.மதியழகன்