ஏட்டிலக்கியம் தோன்றுவதற்கு முன், வாய்மொழி இலக்கியமே அனைத்து மொழியிலும் தோன்றியிருக்கும். அந்த வகையில் காலங்காலமாக வாய்மொழியில் நிலைபெற்ற இலக்கியங்களே நாட்டுப்புற இலக்கியங்கள் என அச்சாக்கம் பெற்றன. இதுவே, தனிப்பெரும் துறையாக உருப்பெற்றது.
நாட்டுப்புறவியல் தொடர்பான பல கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். ஒரு கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற பலரது சிந்தனைகளை இந்நுால் உள்ளடக்கியுள்ளது. நுாலில் மொத்தம், 27 கட்டுரைகள் அடங்கியுள்ளன. இவற்றில் பெரும்பாலான ஒப்பீட்டு நிலையிலானவை. இவை, செவ்விலக்கியங்களில் நாட்டுப்புறக் கூறுகள், சிந்தனைகள் எவ்வாறு இடம்பெற்றுள்ளன என்பதை ஒப்பிட்டுக் காட்டுகின்றன.
தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், நீதி இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம் என அனைத்திலும் நாட்டுப்புறக் கூறுகள் இடம்பெற்றுள்ளதை சான்றுகளோடு முன்வைத்துச் செல்கிறது இந்நுால். பழந்தமிழ் இலக்கியங்களில் ஆடைகள், பாணர் மரபுகள், பத்துப்பாட்டு எனும் ஒரு சில கட்டுரைகள், நாட்டுப்புற இயலில் இருந்து மாறுபட்டவை, எனினும் அக்கால மக்களின் வாழ்வியலைக் காட்டுவனமாக சுவை பயக்கின்றன.
கண்ணகியின் கதைப்பாடல் -சிலம்போடு எப்படி ஒத்து போகிறது? என்பதை ஆராய்கிறது ஒரு கட்டுரை. பழமொழி நானுாறு, திருக்குறள் ஆகிய நீதிநுால்களில் கூறப்படும் கருத்துகள் எவ்வாறு நாட்டாரியலோடு ஒத்துப்போகின்றன என்பதைக் காட்டுகின்றன சில கட்டுரைகள். நாட்டுப்புறவியலின் பெருமையை அறிய முனைவோருக்கு இந்நுால் ஒரு அரிய நுால்.
– முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன்