நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தது, ‘தினமலர் – வாரமலர்’ அந்துமணியின், ‘கேள்வி – பதில்’ தொகுப்பு... இதோ புத்தகமாக வெளி வந்துவிட்டது.
எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக வந்துள்ளது புத்தகம்!
‘நான் எழுதிய கருத்துக்கள், புத்தகத்தின், 312 பக்கங்களிலும் குவிந்து கிடக்கும் போது, எதற்கு என்னுரை, முன்னுரை எல்லாம்...’ என, அந்துமணி அவர் பாணியில் நேரடியாக களத்திற்கு வந்து விடுகிறார்.
எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், தன் அணிந்துரையில் குறிப்பிட்டது போல, 50 லட்சத்திற்கும் மேலான வாசக – வாசகியர் வாசிக்கவும், நேசிக்கவும் கூடிய எழுத்தாளர், அந்துமணி ஒருவராகத்தான் இருக்க முடியும்;
இப்படிப்பட்ட லட்சக்கணக்கான வாசகர்களின் ஆர்வத்தை, விருப்பத்தை இந்த புத்தகம் நிச்சயம் பூர்த்தி செய்யும்.
கடந்த, 1988 முதல், 1997ம் ஆண்டு வரை, ‘வாரமலர்’ இதழில் வெளிவந்த கேள்வி – பதில்கள் மட்டுமே இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.
‘ஏன் அதற்கு பின் கேள்வி – பதில்கள் வரவில்லையா?’ என, எண்ணி விடாதீர்கள். அவை அடுத்தடுத்த தொகுப்பாக கண்டிப்பாக வெளிவரும்.
இனி, புத்தகத்திற்குள் செல்லலாம்...
மொத்தம், 1,521 கேள்வி – பதில்கள்... இதில், எந்த கேள்வி – பதிலும் சாதாரணமானதும் இல்லை; ஒன்றுக்கு ஒன்று சளைத்ததும் இல்லை. தினமலர் – வாரமலர் குற்றால டூரில் கலந்து கொண்ட, பட்டிமன்ற பேச்சாளர், ஞானசம்பந்தன் ஒரு முறை, அந்துமணியின் எழுத்துக்களை பற்றி குறிப்பிடும் போது, ‘இவர் பேனா ஒவ்வொரு முறை குனியும் போதும், இவர் எழுத்தால் பெண்மை உயர்வு பெறுகிறது...’ என்றார்.
அதை நிரூபிப்பது போல, பக்கத்திற்கு பக்கம் மிளிர்கின்றன, பெண்களின் தன்னம்பிக்கைக்கு, உயர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள அந்துமணியின் பதில்கள்!
அதேபோன்று, பெண்கள் பிறந்த வீட்டில், புகுந்த வீட்டில், வேலை செய்யும் இடத்தில், பயணத்தில், பொது இடத்தில் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகின்றனர் என்பதை ஒரு தாயின் பரிவோடு, தந்தையின் கனிவோடு, சகோதரனின் பாசத்தோடு தன் பதில்களால் பாதுகாப்பு தந்து வருகிறார் என்பதை பல பதில்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக, இவரது பதில்களில் வெளிப்படும் இவரது சமுதாய அக்கறை, தொலைநோக்கு பார்வை, நுண்ணிய அறிவு, எதையும் தைரியமாக விமர்சிக்கும் துணிச்சல் மற்றும் நேர்மையை உணரலாம். இத்தனை விஷயங்களையும் எளிமையான வரிகளில் சொல்லிஇருப்பது தான் இவரது பலம்.
அந்துமணியின் பெயருக்கான காரணம், அந்துமணிக்கு தெரிந்திருக்கிறதோ இல்லையோ, கவுந்தப்பாடி வி.கேசவனுக்கு தெரிந்திருக்கிறது. புத்தகத்தை படிக்கும் போது நீங்களும் தெரிந்து கொள்வீர்கள்.
எப்படி இப்படி கிருபானந்த வாரியார் முதல், கிரயோஜெனிக் ராக்கெட் வரை எல்லாவிதமான கேள்விக்கும் பதில் தரும் விசாலமான அறிவைப்பெற்று இருக்கிறார் என்ற நம் ஆச்சரியத்திற்கு, ‘நாட்டில் வெளியாகும் நாளிதழ்கள், பருவ இதழ் என, 90 சதவீத இதழ்களை படித்து விடுவேன்...’ என்ற பதில் மூலம் அவரது எழுத்து சிறப்பிற்கும், சிந்தனை ஆற்றலுக்கும் விடை கிடைக்கிறது.
ஆனாலும், என்னைப் போன்றவர்கள் இவரது ரசிகனானதற்கு காரணம், இவரது எழுத்தில் இருக்கும் கேலி, கிண்டல், நையாண்டி தான். யாருடைய மனதையும் புண்படுத்தாமல், இன்னும் சொல்லப்போனால், சம்பந்தப்பட்டவர்களையே சிரிக்க வைத்திடச் செய்திடும் நையாண்டி நடை இவருடையது. தன்னையே பல இடங்களில் நையாண்டிப் பொருளாகவும் ஆக்கிக் கொண்டுள்ளார்.
பக்கம் 34ல் திட்டச்சேரி, எம்.எப்.ஷர்புதீன் கேட்ட, மாட்டு வண்டிப் பயண அனுபவ கேள்விக்கும், 55ம் பக்கத்தில் கல்லுாரி நாட்களில், ‘சைட்’ அடித்த அனுபவம் பற்றிய கேள்விக்கும், 166ம் பக்கத்தில், கூனியூர் சுமதி, ‘உலகப்புகழ் பெற்ற எங்க ஊர் அப்பளம் சாப்பிட்டதுண்டா?’ என்ற கேள்விக்கும், அந்துமணி தந்துள்ள பதில், ஆயிரம் வடிவேலு ஜோக்குக்கு சமம்!
இப்படி மாட்டு வண்டியில் பயணித்தவர், பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து கிடைத்த அனுபவங்களையும், ‘நறுக் சுருக்’காக, தேவைப்பட்ட இடத்தில் பயன்படுத்தியிருக்கிறார். அதே போல, அரசியல்வாதிகளையும், சினிமாக்காரர்களையும் கிண்டல் செய்வது என்றால், அந்துஜிக்கு (பெயர் உபயம்: அரவக்குறிச்சிப்பட்டி எம்.அசோக்ராஜா) அல்வா சாப்பிடுவது போல...
பக்கம், 58ல் செங்கம் வாசகர், அ.முகமது இலியாஸ், ‘முதல்வர் கருணாநிதி, தினமலர் இதழை வாங்காதீர் என பேசி வருகிறாரே’ என்ற கேள்விக்கும், பக்கம், 219ல் மதுரை அ.ராஜா ரஹமான் கேள்விக்கும் அந்துமணி தந்த பதிலில் வெளிப்படும் அவரது புத்திசாலித்தனம் வெகுவாக ரசிக்க வைக்கிறது!
உதாரணத்திற்கு, 284ம் பக்கத்தில், சென்னை க.ராஜகோபாலன் என்ற வாசகர், ‘ரவுடிகளை போலீசார் சுட்டுக் கொல்வது சரிதானா?’ என்று கேட்ட கேள்விக்கு, ‘நுாற்றுக்கு நுாறு சரி; ரவுடிகளை, கைது செய்து, கோர்ட்டில் விசாரித்து, நாட்களைக் கடத்தி, அவர்கள் ராம்ஜெத்மலானிகளை வரவழைத்து (அந்த காலகட்டத்தில் குற்றவாளிகளிடம் பெரும் பணம் வாங்கிக் கொண்டு வாதாடியவர்) சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பித்து, மீண்டும் உருட்டுக் கட்டைகளையும், பட்டாக் கத்திகளையும் துாக்க விடுவது மாபெரும் சமூக துரோகம்...’ என்ற அவரது பதிலைத்தான், 30 ஆண்டுகளுக்கு பின் இப்போது, ஐதராபாத் என்கவுன்டர் சம்பவத்தை முன்வைத்து, மொத்த இந்தியாவும் சொல்லிக் கொண்டு இருக்கிறது.
வருங்காலத்தில் கம்ப்யூட்டர் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது என்றார் இப்போது அப்படித்தானே!
அதேபோன்று, எந்த காரணம் கொண்டும் காஷ்மீரை கழற்றி விடக்கூடாது என்பதை பல உதாரணங்களுடன் விளக்குகிறார்; நீண்ட காலத்திற்கு பின், அவர் விருப்பம் நிறைவேறியுள்ளது.
இவை மட்டுமல்ல, பல விஷயங்களில் இவர் சொன்னது நடந்துள்ளது. இன்னும் சில விஷயங்களை வலியுறுத்தியுள்ளார்; அதுவும் நடக்க வேண்டும். அவற்றுள் ஒன்று,
நாட்டின் ஜீவநதிகளை இணைக்க வேண்டும் என்பது!
இன்றைய தலைமுறைக்கு தெரியாத பல விஷயங்களையும் இந்த புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆரம்பித்த த.மு.மு., என்ன ஆனது, நடிகர் பாக்யராஜ் ஆரம்பித்த எம்.ஜி.ஆர்., மக்கள் முன்னேற்ற கழகம் எப்படிப் போனது, ம.பொ.சி., நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு போன்றவர்களின் கட்சி...
இதுபோல இன்னும் பல கேள்விகளுக்கும் இவர் தந்துள்ள பதில், அன்றைய காலகட்டத்திற்கு மட்டுமல்ல; இன்றைய காலத்திற்கும் பொருந்தும். அந்த வகையில் இந்தப் புத்தகம் ஒரு காலப்பெட்டகம் மட்டுமல்ல; கருத்துப் பெட்டகமும் கூட!
– எல்.முருகராஜ்