தில்லையாடி ராஜா தான் மிகவும் ரசித்துப் படித்த நாவல்களையும், நாவல் ஆசிரியர்களையும் நமக்கு அறிமுகம் செய்கிறார்.
சம்பத் அதிகமாக விளம்பர வெளிச்சம்பெறாத அற்புதமான எழுத்தாளர்.
ஆனால், அற்ப ஆயுளில் மாண்டு போனார். அவர் எழுதிய ஒரே ஒரு நாவல் இடைவெளி.
இடைவெளியின் கதாநாயகனுக்கு கலவி இன்பம், வாழ்வின் ஒரு அற்புதம். ஆனால், அவன் சதா மரணம் பற்றியும் சிந்தித்தபடி இருக்கிறான்.
கீழ் வெண்மணியில் பாட்டாளிப் பெருமக்கள் எரிக்கப்பட்டது பற்றி இரண்டு நாவல்கள்... ஒன்று இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல், இன்னொன்று சோலை சுந்தர பெருமாளின் செந்நெல். இந்திரா பார்த்தசாரதி முன்னுரையில் இப்படிச் சொல்கிறார்: ‘தலித் மக்களை உயிருடன் கொளுத்திய பண்ணையார் 56 வயது ஆகியும் விவாகம் ஆகாதவர்.
கொளுத்தப்பட்டவர்களில் பெரும்பான்மையோர் பெண்கள், குழந்தைகள். இயற்கை தன்னை வஞ்சித்து விட்ட காரணத்தால், தன் கோபத்தைப் பெண்களிடத்தும், குழந்தைகளிடத்தும் காட்டி இருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது.
இந்த நுால், 12 நாவல்களைப் பற்றி பேசுகிறது. நெஞ்சை அள்ளும் விமர்சனங்களைப் படிப்போர் மூல நுால்களைத் தேடிப் படிப்பர் என்பதில் ஐயம் இல்லை.
– எஸ்.குரு