இருபத்தோராம் நுாற்றாண்டின் மென்பொருள் பொறியாளர் ஒருவர் பெண் பார்க்க செல்வதாக துவங்கும் கதை, ஆரம்பத்திலேயே வெகு வேகமாக செல்கிறது. புத்தகத்தை எடுத்துவிட்டால், 74ம் அத்தியாயம் வரைக்கும் படிக்க கதையோட்டம் நீரோட்டமாய் அமைந்துள்ளது.
‘பேஸ்புக், சாட்டிங்’ என்று தற்கால மொழியில் தற்காலப் பிரச்னைகளைச் சாதுர்யமாக அணுகுவதுடன், மெல்லிய காதலையும் படம் பிடித்துக் காட்டுகிறது. நாவலாசிரியர் கோ.கமலக்கண்ணனுக்கு இந்த கால பேச்சு மொழி, மிகவும் எளிமையாக வந்திருக்கிறது. கொஞ்சமும் சிரமப்படாமல், கதையை நகர்த்தும் துல்லியத்தை இந்த நாவலில் காண முடிகிறது.
‘ரயில் நிலையங்களில் வைபை ப்ரீ; ஆனா, ஒண்ணுக்கு அடிக்க 2 ரூபாய். உங்களுக்கு இதுதான் வளர்ச்சின்னா, நம்ம நாடு வளர்ச்சி அடைஞ்சிடுச்சின்னே நினைச்சுக்கோங்க’ எனச் சமூக நிலையை வினாக்குறிக்கு உள்ளாக்கியுள்ளார் நாவலாசிரியர். சமூக நாவல் ஒன்றில் சமூக விழிப்புணர்வையும், மருத்துவ விழிப்புணர்வையும் உள்ளீடாக்க முடியும் என்பதற்கு நல்கிராமம் எனும் இந்த நாவல் எடுத்துக்காட்டு.