எல்லா உயிரினங்களும் இயற்கையை ஒட்டி வாழ்வதையே விரும்புகின்றன. அன்று இயற்கைச் சூழலுடன் இருந்த தனி வீடுகள், தற்போது அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாறி வருகின்றன.
இயற்கையோடு ஒன்றிய வாழ்வை விட்டு விலகி, நகர வாழ்வு வாழ்ந்து வருகிறோம். விளைநிலங்களை குடியிருப்புகளாக மாற்றியதால், உணவு உற்பத்தி இழப்பை சந்திக்கும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டோம்!
மண் மற்றும் நிலத்தடி நீர் மாசுபட்ட இடங்களில் இருந்து வரும் காய்கறிகளை சாப்பிடுவதைத் தவிர்க்க, நம் வீட்டில் மாடித் தோட்டம் அமைத்து, நமக்கு நாமே மாசு இல்லாத மண் மற்றும் நீரை பயன்படுத்தி காய்கறி மற்றும் பழங்களை உற்பத்தி செய்து, நம் தேவையை நாமே பூர்த்தி செய்து கொள்ளலாம்.
‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில் உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்!’ என்று பாடியுள்ள மகாகவி பாரதியின் வைர வரிகளுக்கேற்ப, இந்நுாலில் காய்கறிகள் மற்றும் பழங்களின் அவசியம், நிழலைத் தாங்கி வளரும் காய்கறிகள், மாடித் தோட்டத்தில் செடி வளர்க்கும் முறைகள் மற்றும் கொள்கலன் அமைக்கும் முறைகள், வளர்ப்பு ஊடகம், காய்கறி வகைகள், விதைகளை விதைத்தல் மற்றும் நாற்று உற்பத்தியின் சிறப்பை கூறும் ஆசிரியர் சண்முகசுந்தரத்தின் மகத்தான வேளாண்மை பணி பாராட்டிற்குரியது.
உர மேலாண்மை மற்றும் நீர் மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு, இயற்கை சாகுபடிக்கான வழிமுறைகள், அசோலா மற்றும் கோழி வளர்த்தல் உள்ளிட்ட தகவல்கள் தொகுக்கப்பட்டு, படங்கள் மற்றும் பட்டியல் இடம்பெற்றுள்ள கண்ணதாசன் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ள இந்நுால், படிக்கும் வாசக – வாசகியருக்கு அரிய பொக்கிஷமாகத் திகழும் என்பது திண்ணம்.
– மாசிலா ராஜகுரு