எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் எண்ணத்தையும், போக்கையும் அவரது படைப்புகள் வாயிலாகக் கண்டறியும் முயற்சியின் வெளிப்பாடு தான் இந்த நுால். எல்லாவற்றையும் தன் கண்ணோட்டத்திற்குள் நுணுகிப் பார்க்கும் பார்வையை, சுந்தர ராமசாமியின் கருத்தாகக் காணமுடிகிறது.
‘சுந்தர ராமசாமியின் சிறுகதைகள், விமர்சன – விவாதக் கட்டுரைகள் முழுவதையும் படித்து அசை போட்ட பின், புளிய மரம் தந்த உற்சாகம் கிடைக்கவில்லை’ என, தன் என்னுரையிலேயே சுருங்கிய வடிவத் திறனாய்வாக வெளியிட்டுள்ளார் ஆசிரியர். ‘சு.ரா.வுக்கு நல்ல, தரமான கலைப் படைப்புகளால் சமூக மாற்றம் உண்டாகும் என்ற ஆழமான நம்பிக்கை இருந்தது.
சு.ரா., கலாசாரம், கலை, படைப்பு ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர் என்பதால், சமூக மாற்றத்திற்கு கலைப் படைப்பை முன்மொழிந்தார்’ (ப., 27) என, கலைப் படைப்பே சமூக மாற்றத்திற்கான வழி என்னும் சுந்தர ராமசாமியின் எண்ணத்தை வழங்கியுள்ளார் ஆசிரியர்.
திறனாய்வு நுாலை இப்படியும் படைக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் அமையும் வகையில், வேறுபட்ட கோணத்தில் சுந்தர ராமசாமியை அணுகி இந்த நுாலைப் படைத்திருக்கிறார் நுாலாசிரியர். மூன்று பகுதிகளாகப் பகுத்து, ஐந்து இயல்களாக்கி மிக நுணுக்கமாக உருவாக்கப்பட்ட பகுப்பாய்வு நுாலாக விளங்குகிறது.
– முகிலை இராசபாண்டியன்