பரந்து காணப்படும் பவுத்த சமய வரலாற்றில், ‘கொங்கு மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு’ என்ற பகுதியை எடுத்து, ஆசிரியர் நீலகண்டன் கொங்கு நாட்டில் பவுத்த மத வளர்ச்சியை சிறப்பாகவும், மிக நுணுக்கமாகவும் காட்டியுள்ளார்.
புத்தரது பெயரைக் கொண்ட புலவர்கள் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்தனர் என்பதையும் இவரது நுாலின் மூலம் அறியலாம்.
கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாக அழைக்கப்படும் கரூர் என்னும் கருவூர்ப் பற்றியும், கரூரில் வாழ்ந்த சங்கப் புலவர்கள் கருவூர் கண்ணம்பானனார், கரூர் கதப்பிள்ளை சாத்தனார், கரூர் கலிங்கத்தார் போன்ற புலவர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருவூர் கிழார், கருவூர் கோசனார், கரூர் சேரமான் சாத்தன், கருவூர் நன்மார்புனார், பவுத்திரனார், பூதஞ்சாத்தனார், கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனாதனார் போன்ற புலவர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
கொங்கு மண்டலத்தில் பவுத்தத் தடயங்கள் என்னும் இயல் மூலம் நுாலாசிரியரின் கடின முயற்சி வெளிப்படுவதை அறியலாம்.
கொங்கு மண்டலத்தில் வரலாற்று கண்ணோட்டம் என்னும் பகுதியில், தமிழகத்திற்கு பவுத்தம் எப்பொழுது யாரால் கொண்டு வரப்பட்டது என்ற செய்தியை தெளிவாக பதிவு செய்து, பவுத்தத் தத்துவங்களையும் விரிவாக விளக்கிஉள்ளார்.
பொதுவாக பவுத்த சமயம் தொடர்பான வரலாற்று ஆய்வு நுால்கள் குறைவாக உள்ள இக்காலகட்டத்தில், நீலகண்டன் எழுதிய இந்நுால், பவுத்தம் குறித்து ஆய்வு செய்வோர்களுக்கும் மற்றும் வரலாற்று ஆசிரியர்களுக்கும் ஒரு சிறந்த ஆவணமாக விளங்கும் என்பது உறுதி.
– பன்னிருகை வடிவேலன்