சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டோருக்கும், நீதி மறுக்கப்பட்டோருக்கும் நியாயம் கிடைக்க உதவும் ஒரே படிப்பு சட்டக் கல்வி தான். இந்த சட்டக் கல்வியின் துணை கொண்டு, அநீதியை வென்று நியாயத்தை நிலைநாட்டக் கூடியவர்களுக்கு, நீதியரசர் லெட்சுமணனின் இப்புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்ற நுட்பத்தை உணர்ந்து, செயலாற்றிய அறிஞர் அண்ணாவின் சிறப்பை இப்புத்தகத்தில் நாம் காணலாம். நீர் இன்றி அமையாது உலகு என்பது போல, மொழி இன்றி அமையாது மனிதனின் வாழ்வு.
அப்படிப்பட்ட மொழியானது நீதிமன்றங்களில் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை, ஆசிரியர் மிகவும் சிறப்பாக இந்நுாலில் பதிவு செய்துள்ளார். தற்கொலை முயற்சி செய்தலும் கூட சட்டப்படி குற்றமாகும் என்னும் கருத்தையும், அதற்குரிய சட்டப்பிரிவு பற்றியும் தெளிவான விளக்கங்களை இப்புத்தகத்தில் அளித்து உள்ளார்.
பெற்றோரையும், மூத்த குடிமக்களையும் கைவிடும் பிள்ளைகளுக்கும் தண்டனை உண்டு எனும் சட்டத்தைப் பற்றியும், பெண்களுக்கு உண்டான சொத்து உரிமைகளைப் பற்றியும், ஜீவனாம்சம் போன்ற தகவல்களையும் இந்நுாலில் பதிவு செய்துள்ளார்.
மேலும், சட்டத்தின் பல தகவல்களை நமக்குத் தந்ததோடு நின்றுவிடாமல், சைவ சமயத்தின் பெருமையையும், திருமுறை பாகுபாட்டின் முறைகளையும் தந்தருளியுள்ளார் ஆசிரியர். சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும் கருத்தியலை உடையவர்களுக்கு, ‘கருத்துக்குவியல் – 3 என்ற இந்நுால் கருத்துச் சுரங்கமாகத் திகழ்கிறது.
–
முனைவர் பன்னிருகை வடிவேலன்