நேரத்தின் முக்கியத்துவம் உணர்ந்தால் முன்னேற்றம் சுலபமாகும். இந்த பேருண்மையை, பொருண்மையாக்கியுள்ள நுால். கவரும், 91 தலைப்புகளில் தொகுக்கப்பட்டு உள்ளது. ‘குமுதம்’ இதழில் தொடராக வந்தது. படித்தால், முன்னேற்றத்தின் முட்டுக்கட்டை உடையும்.
அன்றாடம் தவறும் சிறு விஷயங்களையும் கவனித்து, அனுபவத்துடன் கோர்த்து, வாழ்க்கை பாடமாக எழுதப்பட்டுள்ளது. சுலபமாக புரியும் மொழிநடையில் உள்ளது. ‘புத்தகம் வாங்குவது செலவல்ல, முதலீடு. ஒரு புத்தகத்தில் கிடைக்கும் அனுபவப்பாடம், வாழ்க்கை பார்வையையே மாற்றிவிட வல்லது. இந்த புதிய பார்வையும், பயணமும் வளமாக்கி விடக்கூடியவை...’ என்று தெளிவு படுத்துகிறார் லேனா.
எது சிக்கனம், எது முதலீடு...
இந்த சந்தேகத்தை தீர்க்க, கருத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. படித்ததும் சிந்தனைக் கோணம் நிச்சயம் மாறும்.
‘ஒரு டை கட்டுகிற நேரம்... அதை அவிழ்க்கிற நேரம்... சாக்ஸ், ஷூ மாட்டும் நேரத்தில் கூட குடும்பத்தினரிடம் அன்பு, அக்கறையை வெளிப்படுத்த முடியும்...’
இது போன்ற உண்மைகளை உணர்த்துகிறது நுால்.
‘கோபம் வந்தாலும் சரி, கோபத்துக்கு உள்ளானாலும் சரி, சிறு இடைவெளி தந்து, சிந்தித்து செயல்பட்டால், அதிசயங்கள் நிகழும். நினைத்ததை நிச்சயம் சாதிக்கலாம்...’ இப்படி நுணுக்கமாக அறிவுரைக்கிறது.
அறிமுகங்களை பலப்படுத்துவதும், பயன்படுத்திக் கொள்வதும் அரிய கலை. இது பலருக்கு தெரிவதில்லை. அது பற்றியும் வழிகாட்டுதல்கள் உள்ளன.
‘சுடு தண்ணீரை காலில் ஊற்றி வாழ்க்கையை ஓட்டாதீர்; இதய மருத்துவருக்கு வருமானம் தராதீர். அவதியை நீக்கி, லயிக்கும் மனதுடன் ஈடுபடும் எந்த செயலிலும், சாதனை தேடிவரும்...’
நம்பிக்கையை நிறைத்து நிறைவு செய்யப்பட்டுள்ளது. சாதிக்கத் துடிப்போருக்கு, பாதை வகுக்கும் நுால்.
– அமுதன்