பல்கலைக் கழகங்களில் துணை வேந்தராக பணியாற்றிய பேராசிரியரின் கட்டுரை தொகுப்பு நுால். சில கட்டுரைகள், அவர் படித்த கல்வி நிறுவனங்களை சிறப்பாக நினைவு கூர்ந்துள்ளன. இரண்டு தீபாவளி என்ற கட்டுரையில், சோக நிகழ்வுகள் சொல் ஓவியமாகியுள்ளன. மகன் நாவரசு நினைவுடனும், ஆழ்துளைக் குழாயில் உயிர் விட்ட சிறுவன் சுஜித் நினைவுடனும் வரைந்துள்ளார்.
சென்னையிலிருந்து புறப்படும் நிகழ்வை ஒரு கட்டுரையாக வடித்துள்ளார். சென்னை வரும்போது, மகன் இருந்தான்; நாய் ஜானியும் இருந்தது. போகும்போது மகனும் இல்லை; அன்பு நாயும் இல்லை என்ற பொருண்மையில் எழுதி உள்ளது, பாரி மகளிர் சோகத்தையும் தாண்டி அமைந்துள்ளது.
பாலுக்குச் சர்க்கரையால் சுவை கூடவேண்டுமே அல்லாமல், சர்க்கரையால் பால் நஞ்சாகிவிடக் கூடாது என்பதை விளக்கி, சிறுபான்மை பற்றிய வரலாற்றுச் சொல்லாடலையும் நிகழ்த்தியுள்ளார். கட்டுரைகள் சிந்திக்க வைக்கின்றன. எண்ணத்திற்கு வலிமை கூட்டும் வடிவத்தில் அமைந்துள்ளன.
– முகிலை ராசபாண்டியன்