மன்னர்கள், தேவதாசிகளை, இறைத்தொண்டு புரிவதற்காக கோவில்களில் நியமித்தனர். அதற்காக நிலங்களும் வழங்கப்பட்டன. தேவரடியார் எனப்படும் இவர்கள் ஆடல், பாடல், கோவில் பராமரிப்பு மற்றும் கோவில் பணிக்கான யாவற்றையும் செய்து வந்தனர்.
இவர்களைப் பற்றி பல நுால்கள் வெளி வந்துள்ளன. இந்நுால் முனைவர் பட்ட ஆய்வு.பதினேழு கட்டுரைகளில், தேவதாசி இன வரலாற்றை முழுமையாக ஆய்ந்து எழுதியிருக்கிறார். தேவதாசிகள் பெரும்பாலும் நடன மாதர்களாகவும் இருந்துள்ளனர். உலக அளவிலும், இந்தியாவிலும் கோவில்களில் இத்தகைய பெண்கள் அமர்த்தப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார். தாய் தெய்வ வழிபாட்டையும், தேவதாசி முறையையும் வரலாற்று தரவுகளின் அடிப்படையில் விளக்கியுள்ளார்.
சங்க காலத்தில் கொண்டி மகளிர், பாடினி, விறலி, கணிகை, பரத்தை என்றழைக்கப்பட்டோர், தேவதாசி முறைக்கு முன்னோடியாகக் கருதப்படக்கூடியவர்கள் என்று கருத்துரைக்கிறார். கடைச்சங்க காலத்தில் பெண் கலைஞர்கள், யாவராலும் வெறுக்கப்பட்டு, சமூகத்தினின்றும் விலக்கப்பட்டனர் என்றும், பின் அங்கீகரிக்கப்பட்டு கோவிலோடு இணைக்கப்பட்டனர் என்றும் தெரிகிறது.
இறைப் பணியில் தேவரடியார்கள் என்ற குழு தவிர்க்கப்பட முடியாத இடத்தைப் பெற்றிருந்தது. சைவ, வைணவக் கோவில்களில் மட்டுமின்றி புத்த, சமணப் பள்ளிகளிலும் இவர்கள் பங்கு பெற்றிருந்ததை சான்றுகளோடு விவரிக்கின்றார்.
தேவதாசிகளின் பங்கு வேதங்களிலும், ஆகமங்களிலும், நாட்டிய சாஸ்திரத்திலும் இருந்திருப்பதை தெரிவிக்கிறார். அவ்வினம் தனித்த வளர்ச்சி அடைந்திருப்பதை, தக்க எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக விளக்குகிறது. தேவதாசிகளின் அர்ப்பணிப்புச் சடங்கு என்ற தலைப்பில் அமைந்துள்ள கட்டுரை, பல அரிய தகவல்களைக் கொண்டிருக்கிறது. பொட்டுக் கட்டும் சடங்கு, பாலியல் உறவு பற்றிய குறிப்பையும் இப்பகுதி உணர்த்துகிறது. கோவில் பணிகள், ஊதியங்கள் மற்றும் வரி விதிப்பு, அளிக்கப்பட்ட தண்டனைகள், சமுதாய மதிப்பு பற்றி எல்லாம் அரிய தகவல்களைக் கொண்டுள்ளன.
இந்த முறைமை வீழ்ச்சியுற்ற வரலாறும், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் பற்றிய வரலாறும் இந்த ஆய்வுக் கட்டுரையின் சிறப்பான பகுதிகளாக உள்ளன. ஆய்வு தொடர்பாக எடுத்துக் காட்டும் தரவுகளும், கல்வெட்டுச் சான்றுகளும் அரிய உழைப்பைக் காட்டுகின்றன.
– ராம.குருநாதன்