வியாசர் மகாபாரதம் சார்ந்த, 60 கதைகளைத் தொகுத்து, புதிய பார்வையில் முன்வைக்கும் நுால். கதை முகப்பில் சுருக்கமான முன்னோட்டம் கொடுத்து, நீதி நெறியைத் விளக்குவதோடு, மையக் கருத்துக்குப் பொருத்தமான ஒரு குறளும் உரையுடன் தரப்பட்டுள்ளது.
கதைகளில் வரும் சாபங்கள், விமோசனங்கள், சூழ்ச்சிகள், துரோகங்கள், தந்திரங்களுக்கிடையில் இழையோடும் அறக்கருத்துகள், எளிய நடையில் தரப்பட்டுள்ளன. பழங்கதைகளாயினும், அவற்றினுாடே காணப்படும் நிர்வாக மேலாண்மை, அரசியல் நெறிகள், அறச் சீற்றங்கள் இன்றும் பொருந்துவது நோக்கத்தக்கது.
வாழ்வில் சிலருக்கே, மதியும், விதியும் வெல்வதுண்டு என்ற சுட்டு நோக்கத்தக்கது. ஒரு தலைமுறையின் தவறுகள் இரண்டு, மூன்று தலைமுறைகளைப் பாதிக்கின்றன என்ற கருத்தை முன்வைக்கிறது. இதிகாசக் கதைகளை இன்றைய பார்வையில் அலசும் மாறுபட்ட நுால்.
– மெய்ஞானி பிரபாகரபாபு