நுட்பமான பொருளை உணர்த்துவது ஜென் தத்துவமும், அதை தாங்கி நிற்கும் சிறுகதைகளும். அமைதி, ஒற்றுமை, கருணை, சமத்துவத்தை போதிப்பது, சூபியிசம். கருணை, அடக்கம், பணிவு போன்ற மகத்தான அறங்களை எளிய கோட்பாடாக விளக்குவது தாவோயிசம்.
இந்த மூன்று உயர் நெறிகளையும் அறிந்து சிந்தனை தெளிவுடன் பகிர்ந்துள்ள நுால். மனதின் நுண்ணிய ஆற்றலை மேம்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. மூன்று தத்துவங்களும் தனித்தனி தலைப்புகளில் தொகுத்து எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு தத்துவத்திலும் ஆர்வமுள்ள எழுத்தாளர்களின் அணிந்துரையும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த தத்துவங்கள் எல்லாம், நடைமுறை வாழ்க்கையுடன் கலந்து வெளிப்படுகின்றன. ஆற்றலை உசுப்பி அமைதியை ஏற்படுத்துகின்றன. மனதுக்குள் ஈரம் போர்த்தி, ஆசுவாசத்தை தருகின்றன. உயர்ந்த நெறிகளை ஏற்றுகின்றன. எளிய நடையில் விவரிப்புகள், தங்கு தடையின்றி வாசிக்கும் வகையில் உள்ளன. மனதை வருடி, தத்துவ எழிலை நுகர வைக்கும் நுால்.
– அமுதன்