பகவான் கண்ணனின் வரலாறு கூறுவது பாகவதம். கண்ணன், பாண்டவரை வழிநடத்தி சென்றது மகாபாரதம். இரண்டு மகா காவியங்களையும் இணைத்து, அம்மானை என்ற செய்யுள் யாப்பு வடிவில், 24 ஆயிரம் பாடல்களாக இயற்றப்பட்டுள்ள நுால்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபல்பனாப புலவர், பனையோலைச் சுவடியில் வில்லுப் பாட்டு கலை வடிவத்தில் எழுதி உருவாக்கியிருந்தார். இதை தேடி கண்டுபிடித்து புத்தகமாக பதிப்பித்துள்ளார் சிவ.விவேகானந்தன்.
பாமரரும் படித்து மகிழும் வகையில், உரைநடைக் காப்பிய நுாலாக உள்ளது. முதலில் ஓலைச்சுவடிகளை தேடி கண்டுபிடித்து கையகப்படுத்திய அனுபவத்தை மிகவும் சுவைபட எழுதியுள்ளார் பதிப்பாசிரியர். மூல நுால், 407 ஓலைச்சுவடிகளில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
வழக்கமான பாகவதம் மற்றும் பாரதக் கதைகளில் இருந்து, இது மிகவும் மாறுபட்டுள்ளது. கதை மாந்தர்களின் பெயர்களே மாறியுள்ளன. திரியோதனன், சற்குனி, விதுாரன், திறுதாட்டிதர், துரோபதி, துச்சராயன், வீட்டுமன் என்ற பாத்திர பெயர்கள் வினோதமாக உள்ளன.
மகாபாரதத்தில் கண்ணன், அர்ச்சுனனுக்குச் சொல்லும் பகவத்கீதை இதில் இல்லை. அதற்கு பதிலாக திருமாலின் ஒன்பது அவதாரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இது மிகப்பெரும் மாற்றம். மற்றொரு விசித்திரம், கர்ணன், துரியோதனனுக்கு பாகவதச் செய்திகளை அறிவுரையாக எடுத்துக் கூறுவதாக உள்ளது.
பாரதத்தில் அபிமன்யு, சக்கர வியூகத்தால் கொல்லப்பட்டது தான் கதை. இதை மாற்றி, பல மன்னர்கள் சேர்ந்து கொல்வதாக உள்ளது. பீஷ்மர், அம்புப் படுக்கையில் கிடக்காமல் உடனே இறந்து விடுகிறார். எல்லாவற்றையும் விட பெரிய மாற்றம், கர்ணன் பாண்டவர்களில் மூத்தவன் என்ற ரகசியம் முன்பே தெரிந்துவிடுகிறது.
காளிங்க நர்த்தனம், பாகவதத்தில் சிறப்பாகப் பேசப்படுகிறது. இந்த நுாலில், காளியன் பாம்பாக வர, அவன் மீது நடனம் ஆடி, மன்னித்து, அவனது பகைவனான கருடனை அழைத்து, அவனையும் மன்னிக்கச் செய்து வாழவைத்து கருணை காட்டுவது போல் உள்ளது கதை.
கர்ணன் பாத்திரம் உருவானது பற்றி, குந்தியின் கன்னம் வெடித்து வந்ததால், ‘கன்னன்’ ஆனான் என்ற செய்தியும் உள்ளது. பாகவதம், பாரதம் இரண்டையுமே சுவைபடக் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது சுவாரசியம் தருகிறது. நாட்டுப்புற வில்லிசை கதை பாடலாக, குமரி மாவட்ட மக்கள் வழக்கில் திகழ்கிறது இந்த நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்