தொண்டை மண்டலத்தில் கி.பி., 222 முதல், பல்லவ மன்னன் பப்பரதேவன் பல்லவ நாட்டை முதலில் தோற்றுவித்து, விரிவுபடுத்திய காலம் வரையிலான கதையைக் கற்பனையாக புனைந்து நான்கு பாகமாகப் படைக்கப்பட்டுள்ளது.
புதினமெங்கும் விவரிக்கப்படும் வீர நிகழ்வுகளோடு மெல்லிய தென்றலாகக் காதல் கதைகள் பின்னிச் செல்கின்றன. இடைக்கால முடிவில் ஆண்ட சமுத்திர குப்தர் ஆட்சியைத் தவிர்த்து, கி.பி., 3ம் நுாற்றாண்டு தொண்டை மண்டலத்தை, பல்லவ நாட்டின் முதல் மன்னன் பப்பரதேவன் முதல், கி.பி., 9ம் நுாற்றாண்டில் ஆண்ட அபராஜித வர்மன் வரையிலான பல்லவ மன்னர்களின் விரிவான பட்டியல் தரப்பட்டுள்ளது.
சரித்திர நுாலாசிரியர்களின் அடிச்சுவட்டில் வரலாற்றுப் புதினம் படைக்கும் முயற்சியில் உருவான கதைப்போக்கில், அரிய வரலாற்றுத் தகவல்களோடு, களவருணனைகளும், உவமைகளும் இதமூட்டுகின்றன.
காதல், பிரிவு, காத்திருப்பு, ஏக்கம், ஏமாற்றம், சூளுரை எனும் எல்லா அகத்திணைக் கூறுகளுடன், வீரம், போர், வாள் வீச்சு, வெற்றி, தோல்வி, சூழ்ச்சி, தந்திரம், வஞ்சகம், பழிக்குப் பழி போன்ற புறத்திணைக் கூறுகளும் விரவிக் கிடப்பதைக் காண முடிகிறது.
புதினத்தினுாடே திருக்குறள், சங்கப்பாடல்கள் மேற்கோள்களும் தக்க இடங்களில் சுட்டப்பட்டுள்ளன. வரலாற்றுப் புதினங்கள் அருகிவிட்ட நிலையில் வெளிவந்திருக்கும் நுால்.
– மெய்ஞானி பிரபாகரபாபு