அகங்காரத்தில் ஆரம்பிப்பதாக நினைத்த எழுத்தாளருக்கு அள்ளித்தரும் அன்னையின் வரம் அந்த நிமிடமே கிடைத்தபோது மனம் மைசூர்ப்பாகாய் கரைந்துவிட்டது. துணையாக கண்ணீர் சேர்ந்து உப்புச்சீடையாக மாறிவிட்டது.
சில நேரங்களில் யாரும் தான் கேட்கமாட்டார்களே என நிஜமான, ‘மைண்ட் வாய்சில்’ மனசுக்குள்ளேயே பேசிய நிகழ்வு நடந்திருக்கும். உடனடியாக நிறைவேறும் போது அதை அனுபவிக்க முடியாமல் மனம் தடுமாறும். இங்கும் அப்படித்தான் அன்னையின் அன்பை நினைந்து மனம் கரைந்து உப்புச்சுவடுகளின் வழியே அப்பனை தரிசிக்கிறார்.
இது அகங்காரம் அல்ல... குழந்தையின் அழுகை.
விஞ்ஞானிகளின் விபரீத அறிவின் முன், பழங்குடியின குழந்தைகளின் விவேகமான அறிவு வென்றதை படிக்கும் போது, ‘உபுண்ட்டு’ என சொல்லி கொள்ள தோன்றுகிறது. அதென்ன உபுண்ட்டு என யோசிக்க ஆரம்பித்தால் நேரடியாக புத்தகத்தை வாங்கி படியுங்கள். கதைக்குள் தொலைந்து போவீர்கள்.
அறம் செய விரும்பு... ஆறுவது சினம்... என கற்றுத் தந்ததை சிறு சிறு கதைகளின் வாயிலாக விளக்குவது அருமை. இறைவனின் கால் செருப்பாக பாவித்த ராமானுஜரின் பணிவை கண்டு வருந்திய மன்னன், ஹவாய் தீவுக்கு மனைவியை அழைத்துச் செல்ல துடிக்கும் கணவனின் தவறான அணுகுமுறை... என ஒவ்வொன்றும் நீதிபோதனை கதைகளாக மனதை நிறைத்துக் கொண்டே செல்கின்றன.
அன்னையே அபிராமியே என அந்தாதி பாடுவது ஒருவகை ஆன்மிகம் என்றால், மனதை நல்லொழுக்கங்களால் பக்குவப்படுத்தி மனித நலனே இறை சிந்தனை என போதிப்பதும் ஆன்மிகம் தான்.
இதை ஆன்மிக கதையாக பெரியவர்களுக்கு மட்டும் என ஒதுக்கி விடாமல் பதின்ம பருவ குழந்தைகளையும் படிக்க வைக்க வேண்டும். தேங்கி நிற்காத எழுத்து நடை எல்லாரையும் கவரும்.
– எம்.எம்.ஜெ.,