நிரூபிக்கப்பட்ட கணிதவியல் நடைமுறை மாதிரிகளின் உதவியோடு, நிறுவப்பட்ட அறிவியலையும், வேதாத்ரி மகரிஷி தத்துவத்தையும் இணைத்து மாறுபட்ட இயற்பியல் முறைமையை முயற்சிக்கும் நுால். இத்தகைய பார்வைக்கு நோபல் பரிசு பெற்ற ஜிம் பீபிள்ஸ், நுாலாசிரியருக்கு வழங்கிய மின்னஞ்சல் வாழ்த்தும் தரப்பட்டுள்ளது.
இயற்பியலுக்குத் தற்போதுள்ள வரைமுறைகளை விலக்கி, அடிப்படையான நுண்பொருண்மைகள், ஆன்மா, மனம், கர்மா போன்ற தத்துவார்த்த மற்றும் மீமெய்யியல் கருப்பொருட்களையும் இணைத்து விரிவாக்க வேண்டிய அவசியத்தை முன்மொழிகிறது.
இயற்பியலை விரிவாக்காத நிலையில் குறுகிய வரையறைக்குள் இயற்கையின் முழுமையை உணர்தல், முழுமை பெறாமலே இருக்கக்கூடிய சூழல் இருப்பதாகக் கூறுகிறது. மின்னணு கண்டுபிடிப்புக்குப் பின், இயற்பியல் துறை அணுவிலிருந்து நுண்துகள் ஆய்வுக்கு நகர்ந்ததைச் சுட்டி, காலப்போக்கில் மூலத் துகள்கள் என்பவை அடிப்படை நுண்துகள்களின் கூட்டமைப்பு என்ற பார்வைக்குத் துகள் இயற்பியல் புரிதல் விரிவாக்கமடைந்தது எடுத்துரைக்கப்படுகிறது.
பிரபஞ்சவெளி பற்றிய வேதாத்ரி மகரிஷியின் தத்துவக் கருத்தாக்கத்தில் இருந்து உருவான இரண்டு அடிப்படைக் கோட்பாடுகள், இயற்பியலை மாற்றி விளக்கும் நிலை சுட்டப்பட்டுள்ளது. பொருண்மை பற்றிய விளக்கமும், புவி ஈர்ப்பு காரணியின் மீதான தெளிவும் அண்டவியல் ஆய்வில் கொண்டுள்ள முக்கியத்துவமும் முன்வைக்கப்பட்டு, வான்வெளி மற்றும் புவிஈர்ப்பு மீதான வேதாத்ரிய கருத்தியலின் அடிப்படையில் பெருந்திரள் நிறை விளக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
வேதாத்ரி மகரிஷியுடனான உரையாடல்கள், சொற்பொழிவுகளின் சாரம், அண்டவெளித் தத்துவம், புவிஈர்ப்பின் வாயிலாக பெருந்திரள் நிறை விளக்கம் ஆகியவற்றை விவாதித்து, புதிய அண்டவியல் மாதிரிக் கோட்பாடு விளக்கப்பட்டுள்ளது. ஆய்வுகளுக்கு வழிவகுக்கவல்ல கருத்துச் செறிவுள்ள புதுமை நோக்கு இயற்பியல் நுால்.
– மெய்ஞானி பிரபாகரபாபு