தினமலர் – வாரமலர் இதழில், வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது, அந்துமணி எழுதி வரும், பா.கே.ப., என்ற, ‘பார்த்தது கேட்டது படித்தது’ பகுதி. இந்த பகுதியில் வெளியான கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, ஏற்கனவே மூன்று புத்தகங்களாக வந்துள்ளன.
நான்கு மற்றும் ஐந்தாவது தொகுதிகளை, தாமரை பிரதர்ஸ் மீடியா பதிப்பகம் தற்போது வெளியிட்டுள்ளது. புத்தகங்களின், ‘என்னுரை’ பகுதியில், பா.கே.ப., பகுதியை தன் டைரி என குறிப்பிட்டுள்ளார் அந்துமணி. சாதாரண மனிதனின் டைரி, மன அந்தரங்கத்தை கூறுவதாக இருக்கும்.
ஆனால், பத்திரிகையாளரான அந்துமணியின் டைரியாக உள்ள பா.கே.ப., அந்தந்த காலகட்டங்களில் நிலவிய சமூக நிலை, தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் நிலவரங்களின் முக்கிய அம்சங்களை கண் முன் விரித்துள்ளது!
சுவாரசியம் நிறைந்த வரலாற்று புத்தகங்களை படிப்பது போன்ற பிரமிப்பு ஏற்படுகிறது. அதேநேரம், அரசியல், சமூக நிகழ்வுகளில் அந்துமணியின் சிந்தனைகள், இந்த காலகட்டத்திற்கும் பொருத்தமாக அமைந்திருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.
இந்நுால்களை காலத்தின் கண்ணாடி என்றே சொல்லலாம். ஒரு காலத்தில் வல்லரசாக, உலகின் பெரிய அண்ணனாக விளங்கிய சோவியத் ரஷ்யா, பிரிவினைவாதத்தால் சிதறிய சோகத்தையும், அதன் தொடர்ச்சியாக வறுமை, வேலையில்லா திண்டாட்டம், சவப்பெட்டி வாங்கக் கூட காசு இல்லாத நிலையில் அரசு மருத்துவமனைகளில் பிணங்களை துாக்கி எறிந்த அவல நிலையை, அந்துமணி காட்சிப்படுத்தியுள்ள விதம் கண்ணீரை வழிந்தோடச் செய்கிறது.
இதேபோன்று, பிரிவினைவாதத்தால் வளமை இழந்து, அழிவைச் சந்தித்த பல நாட்டு வரலாறுகளை மேற்கோள் காட்டி, பிரிவினைவாதமும், தீவிரவாதமும் தலைதுாக்கினால், அந்த நாடும், மக்களும் எத்தகைய துயரத்துக்கு தள்ளப்படுவர் என்பதை அழுத்தமான வரிகளில் விடுத்துள்ள எச்சரிக்கை நிச்சயம் விழிப்படையச் செய்யும்.
நாணயத்திற்கு இரு பக்கம் இருப்பது போல், நாடுகளுக்கும் இரு பக்கம் உள்ளது. இதைக் காட்ட, ஜப்பான் நாட்டில் உள்ள ஜாதிய பாகுபாடு பற்றி விளக்கி, ஆச்சரியத்தில் விழிகளை உயர்த்த வைக்கிறார். ‘மனிதர்கள் எவ்வளவு படித்திருந்தாலும், நாகரிகம் மிக்கவர்களாக காட்சியளித்தாலும், அடி மனதில் மறைந்து கிடக்கும் மன அழுக்கை களைய, நாடுகள் தோறும் அம்பேத்கர்கள் உதிக்க வேண்டும் போல’ என்ற எண்ணத்தையே அந்துமணி வெளிப்படுத்துகிறார். இது, அவரது சமூக அக்கறையை பறைசாற்றுகிறது.
அதுபோல, மேலை நாட்டினர் எல்லாம் அறிவு ஜீவிகள் என்பது போல், நம்மில் சிலர் கூறுவதை பொய்யாக்கும் விதமாக, கனடா நாட்டினரின் கல்வி அறிவு குறித்து அந்துமணி தரும் புள்ளி விபரங்களை படிக்கும் போது, ‘நம் நாடு எவ்வளவோ மேல்’ என்ற வார்த்தையை, நம்மை அறியாமல் வாய் முணுமுணுக்கும்.
அந்துமணி எழுத்தின் சிறப்பே இது தான்...
அலுப்பு தட்டும் விஷயங்களைக் கூட, குற்றாலச் சாரலில் நனைவது போல், கவரும் எழுத்தால் சுகமாக அனுபவிக்க வைத்து விடுகிறார். அதற்கு உதாரணமாக, இந்த புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பல கட்டுரைகளை கூறலாம்.
அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டனின் காதல் கதையாகட்டும்; ருவாண்டா நாட்டில் ருட்சி, ஹூடு இனத்தவர்களின் இனவாத பிரச்னையின் மையப் புள்ளியை தொட்டுச் செல்வதாகட்டும்; எந்த பகுதியிலும் குழப்பதற்கு வழியில்லாமல், வார்த்தைகளை எளிமையாக்கி, படிப்பவர் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து விடுகிறார் அந்துமணி.
வாசிக்க ஆரம்பித்தால், இரண்டு புத்தகங்களையும் முடிக்காமல் கீழே வைக்க முடியவில்லை. அந்த அளவு பக்கத்திற்கு பக்கம் சுவாரசியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பயணம் நெடுக, அந்துமணியுடன் லென்ஸ் மாமாவும் வருகிறார்; அவ்வப்போது நகைச்சுவையால் வாய்விட்டு சிரிக்க வைக்கிறார்; சில இடங்களில் ஜொள்ளால் பக்கத்தை நிரப்பி, எண்ணங்களில் ஏந்த வைக்கிறார்.
அந்துமணியின் கட்டுரைகள் ஜாங்கிரி என்றால், சாப்பிட்ட பின் நாவில் ஒட்டிக் கொண்டிருக்கும் இனிப்பாக சுவாரசியம் கூட்டுகிறார், லென்ஸ்மாமா. கூடவே, வாசக – வாசகியரின் கடிதங்கள் சமூக நிகழ்வுகளை காட்டுகின்றன.
புருஷனிடம் அடி வாங்கும் வாசகியரின் கடிதமாகட்டும்... கல்லுாரி கால காதல், ஆண் – பெண் நட்பு குறித்த கருத்து பரிமாற்றமாகட்டும்... கணவன், மனைவியர் மீது சுமத்தும் குற்றச்சாட்டு ஆகட்டும்... கிரிக்கெட் வீரர் வினோத் காம்பளிக்கு, அந்துமணியை காதல் துாது விட்டு வாசகி எழுதிய கடிதமாகட்டும்... எல்லாம் வெகு சுவாரசியம்!
எல்லாவற்றிலும் மாறுபட்டு சிந்திக்கக் கூடியவர் அந்துமணி என்பதற்கு ஒரு சான்று...
அந்த காலகட்டத்தில், எல்லாரும் சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பற்றி, வாய் ஓயாமல் பேசி, கை வலிக்க எழுதி வந்தனர். அதேவேளை மாறுபட்டு சிந்தித்துள்ளார் அந்துமணி.
உலகச் சந்தையில், சந்தனக் கட்டைக்கு இருக்கும் வரவேற்பை எடுத்துக் கூறி, கடத்தல்காரர்களிடம் கைப்பற்றிய சந்தனக் கட்டைகளை, முறையாக விற்பதன் மூலம் கிடைக்கும் பலாபலன்களை, மக்கள் நலனுக்கு பயன்படுத்த அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.
படிக்கும் போது, ‘அட... தமிழக அரசு இதை யோசிக்கவே இல்லையே’ என சிந்திக்க வைத்து விடுகிறார், அந்துமணி. அவரது எழுத்தாற்றல், பக்கத்திற்கு பக்கம் வசீகரிக்கிறது. கட்டுரைகள், நம்மையும் பயணத்துக்கு துாண்டுகின்றன. சினிமா, தொலைக்காட்சி தாக்கம் இளைஞர்களை எந்த அளவு மூளைச் சலவை செய்து, கலாசார சீரழிவிற்கு வித்திட்டுள்ளது என்பதற்கு, ரயில் பயணத்தில் பெற்ற அனுபவத்தை விவரித்துள்ளார்.
அற்புத எழுத்து நடையால், அக்காட்சி படம் போல் கண் முன் விரிந்து வியக்க வைக்கிறது. இளைஞர்களிடம் பரவியுள்ள சினிமா மோகம், நொந்து போகவும் வைக்கிறார் அந்துமணி. அதேநேரம், ‘பக்கோர பைங்கன்’ என்ற உணவு பற்றி சமையல் குறிப்பு கொடுத்து ஆச்சரியப்பட வைக்கிறார். இவற்றை படிக்கும் போது, ‘மனுஷன் தொடாத துறைகளே இல்லை போலும்’ என்று சபாஷ் போடுகிறது மனம்.
உலக நிகழ்வுகளிலிருந்து, உள்ளூர் பிரச்னை வரை விவரித்திருப்பது, அந்துமணியின் பன்முகத் திறனை வெளிப்படுத்துகிறது. புத்தகத்தில் எல்லா பக்கங்களும் விஷய ஞானத்தை தாங்கி உள்ளன. தமிழக ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களின் நிறை, குறைகளை சுட்டுவதுடன், பிரிவினைவாதிகளின் சுயநல முகமூடிகளையும் கிழிந்தெறிந்துள்ளார்.
அந்துமணி சுவாரசியமாக எழுதக் கூடியவர் மட்டுமல்ல; எந்த சமரசத்திற்கும் உட்படாத, நாட்டு நலனே மக்கள் நலன் என்ற உயர்ந்த நோக்கில், உண்மையை உரக்கக் கூறும் பண்பாளர் என்பதும் இதன் மூலம் பளிச்சிடுகிறது. பதிப்பகத்தார் இந்த நுால்களுக்கு வைத்திருக்கும் விலை மிகவும் குறைவு. புத்தகத்தை படித்து முடித்ததும், மனதில் ஏற்படும் திருப்தியே இதை நிரூபிக்கும்! பக்கத்துக்கு பக்கம் தொய்வின்றி விறுவிறுப்பாக உள்ளன இந்த நுால்கள். அனைவரும் படித்து, பாதுகாக்க வேண்டிய அரிய பொக்கிஷங்கள்!
– மீனாட்சி சுந்தரம்