ஒரு சின்ன பூனைக் குடும்பம்; அதுல, அம்மா, அப்பா, ஒரு குட்டிப் பூனைன்னு அன்பு அன்பா குடும்பம் நடந்துச்சாம்... ஒரு நாள், அப்பா பூனை செத்துப் போச்சாம். அப்போ அம்மா பூனையும், குட்டி பூனையும் அப்பாவோடு பேசி மகிழ்ந்த வார்த்தைகளைச் சொல்லிச் சொல்லி அழுதுச்சாம்... அது ரெண்டும் என்ன சொல்லி அழுதுச்சுன்னு சொல்லுங்க பார்ப்போம்?
ரஜினி சாரை போட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொன்னா, எப்பவுமே தலையை ஒரு பக்கமா சாச்சிக்கிட்டுதான் போஸ் கொடுப்பாராம் ஏன்னு சொல்லுங்க? ‘உங்ககிட்ட ரொம்ப முக்கியமான விஷயம் பேசணும்’ணு, அந்துமணியை சந்திக்க வந்த வாசகி ஒருவர், அடுக்கடுக்காய் இப்படி புதிர் போட்டால் எப்படி இருக்கும்?
வாசகர்கள் தன்னை ஒரு நண்பனாக, சகோதரனாக நம்பி எல்லா விஷயத்தையும் பரிமாறிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை விதைத்திருப்பதால், ஏற்படும் அன்புத் தொல்லை அது. இதில் இருந்து அந்துமணி எப்படி தப்பினார் என்பதையும், இந்த புதிருக்கான விடை என்ன என்பதையும் கடைசியில் பார்க்கலாம். அதற்கு முன் புத்தகத்திற்குள் சென்று வந்துவிடலாம்.
உங்களின் குரலாய் வாசகர்களின் அமோக ஆதரவு காரணமாக, அந்துமணி எழுதி வாரமலர் இதழில் வெளியான, பா.கே.ப., (பார்த்தது, கேட்டது, படித்தது) தொடரின் ஆறாவது பாகம், 260 பக்கங்களுடன் அசத்தல் அட்டையுடன், அருமையான புத்தகமாக வெளிவந்துள்ளது.
ஏற்கனவே, கேள்வி – பதில் பகுதி வாயிலாக, வாசகர்களாகிய உங்களுடன் நான் நெருங்கி விட்டாலும், மனதுக்குள் ஒரு தவிப்பு... உங்களிடம் இன்னும் நிறைய பகிர்ந்து கொள்ள வேண்டும்,
உங்களின் குரலாய் என் எழுத்து பிரதிபலிக்க வேண்டும் என்று! தங்கள் சுயநலத்திற்காக உலக அறிவு, வாழ்க்கை பக்குவம் இல்லாத அப்பாவி இளைஞர்களிடம், பிரிவினை வாதத்தை விதைக்கும் நயவஞ்சக கூட்டத்தை பார்க்கும் போது...
நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத்
திறனுமின்றி
வஞ்சனை செய்வாரடி கிளியே..
இவர் வாய்ச் சொல்லில் வீரரடி!
எனும் அந்த மீசைக் கவிஞனின்
கோபமும்...
சமூக அவலங்களை பார்க்கும் போதும், கேட்கும் போதும் எழும் மனக் கொதிப்பும்...
ஆட்சி அதிகாரத்திற்காக, பச்சோந்திகளாய் நிறம் மாறி, வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதியாய் அளிக்கும் அரசியல்வாதிகளின் ஏமாற்று வேலைகள்...
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்
ஊழல், இத்யாதி... இத்யாதி...
இத்யாதி...
ஆடு வளர்ப்பு திட்ட மோசடி வாசகர்களான உங்களைப் போல எனக்குள் எழும் தார்மீக கோபம், கேள்விகள் இவை அனைத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வதே, இந்த பகுதியின் நோக்கம் என்று முண்டாசு கட்டாத பாரதியாக, அந்துமணி எழுதி இருக்கும் இல்லையில்லை... குமுறியிருக்கும் என்னுரையை வாசிக்கும் போதே, மொத்த புத்தகத்தையும் ஒரே மூச்சில் படித்து முடிக்கும் ஆர்வம் ஏற்படுகிறது.
நமக்குள் ஏற்பட்ட ஆர்வம் சரிதான் என்பதை, புத்தகத்தின் கடைசி பக்கம் வரை தன் எழுத்தால் நிரூபிக்கிறார். ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்ற தலைப்பில், குணா என்பவர் எழுதிய புத்தகத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருந்த விஷயங்களைப் படிக்கும் போது, திராவிட பூச்சாண்டிகளிடம் யாரும் ஏமாந்து விடமாட்டார்கள் என்பது நிச்சயம்.
இந்த புத்தகம், 1995 – 96ம் வருடம் அவர் எழுதியதன் தொகுப்பு. அந்தக் கால கட்டத்தில் மக்களை தேக்கு மரத்திட்டம், புளிய மரத்திட்டம், சவுக்கு மரத்திட்டம், ஆடு வளர்ப்பு திட்டம், ஒரு பங்கு பணம் கொடுத்தால், நுாறு நாளில் மூன்று பங்காக திரும்பத் தரும் திட்டம் என்று பல்வேறு போலியான திட்டங்களை விளம்பரப்படுத்தி, பாவப்பட்ட மக்களின் பணத்தை ஏமாற்றி, மோசடி செய்து வந்தனர்.
மனசாட்சியின்றி காசுக்கு ஆசைப்பட்டு சில நடிகர், நடிகையரும் இது போன்ற போலி நிறுவனங்களின் விளம்பரபடங்களில் நடித்து, பாமர மக்களின் ஆசையை துாண்டிக் கொண்டிருந்தனர்.
அந்துமணி மட்டுமே இந்த மோசடிக்காரர்களை எதிர்த்து, விமர்சித்து, அவர்களது பொய் முகங்களை கிழித்து, பல வாரங்கள் இது பற்றி விலாவாரியாக எழுதியுள்ளார். அது மட்டுமின்றி, குற்றாலம் சுற்று வட்டாரத்தில் நேரடி கள ஆய்வில் ஈடுபட்டு, ஆடு வளர்ப்பு திட்டம் பற்றிய மோசடியை அம்பலப்படுத்தியுள்ளார்.
அந்துமணி எழுதியதற்கேற்ப, அடுத்தடுத்த சில மாதங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கிடைத்த வரை லாபம் என மக்கள் பணத்தை சுருட்டி தலைமறைவாகின.
கண்ணீருடன் கடிதம்
பல வாசகர்கள், ‘நல்ல வேளை... என் ஓய்வு ஊதிய பணப்பலன் முழுவதையும் இதில் செலுத்தி ஏமாற இருந்தேன்; காப்பாற்றிவிட்டீர்கள்...’ என்றும், ‘என் மகளின் திருமண செலவிற்கான பணத்தை கட்டலாம் என நினைத்தேன்; தப்பித்தேன்...’ என, ஆனந்த கண்ணீருடன் கடிதம் எழுதி நன்றி தெரிவித்துள்ளனர்.
புதுமைகளின் நாயகனான அந்துமணி தன், பா.கே.ப.,விலும் புதுமை புகுத்தும் நோக்கில், தன் எழுத்துக்கு வலு சேர்க்கும் விதத்தில், புகைப்படங்களை இணைத்துள்ளார்.
உதாரணமாக அமெரிக்காவில், ‘இருக்கப்பட்டவர்கள்’ பல் டாக்டர் உதவியுடன், தங்கள் பல்லில் தங்கம் வைரம் பதித்துக் கொள்வதாகவும், இதைத் தெரிந்து கொண்ட திருடர்கள், வைரத்திற்கு ஆசைப்பட்டு பல்லையே தட்டிக்கொள்ளையிட்டுச் செல்வதாகவும், நகைச்சுவையுடன் எழுதி, அதற்கான படங்களையும் இணைத்துள்ளார்.
நகைச்சுவை உணர்விற்கு தீனி
வியட்நாம் போரின் போது, ஒட்டுத்துணி இல்லாமல் ஒன்பது வயது சிறுமி நிர்வாணமாக ரோட்டில் ஓடி வரும் புகைப்படத்தை நாம் பார்த்திருப்போம்.
பல ஆண்டுகளுக்கு பின் அந்த சிறுமியின் நிலை என்ன என்பதை அறிவதற்காக எடுத்துக் கொண்ட முயற்சியை சுவராசியமாக எழுதியிருப்பதுடன், அதற்கான படத்தையும் இணைத்திருப்பது
அவர் மேற்கொண்ட படத்துடன், செய்திக்கான உத்திக்கு உரமூட்டுகிறது.
எப்போதுமே சப்ஜெக்டிவாக எழுதிக்கொண்டே இருப்பதில் இருந்து விலகி, நகைச்சுவையாக எழுவதில் கில்லாடியான அந்துமணி, இந்த புத்தகத்தின் பல பக்கங்களில் தன் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி உள்ளார்; அவரது நகைச்சுவை உணர்விற்கு தீனி போடுவதற்காக, லென்ஸ் மாமாவும் அடிக்கடி வந்து செல்கிறார்.
திடீரென கதவை திறந்து கொண்டு உள்ளே நுழையும் லென்ஸ் மாமா, ‘அந்து... உன்னிடம் ஒரு விஷயம் சொல்லலாமா, வேண்டாமா என, காலையில் இருந்து மனம் திண்டாடுகிறது...’ என்கிறார்.
‘பரவாயில்லை... எதுவானாலும் சொல்லுங்க நான் தீர்த்து வைக்கிறேன்!’ என்று, எழுதுவதை விட்டுவிட்டு, லென்ஸ்க்கு உதவ அந்துமணி சீரியசாக தயாராகிறார்.
ஆனால், ‘வேண்டாம்பா... இதனாலே நாம் நட்புக்கு கூட கேடு வரும்’ என, லென்ஸ் முரண்டு பிடிக்கிறார்.
வாய்விட்டு சிரிப்பர் ‘எதுவும் நடக்காது சொல்லுங்க’ என, அந்துமணி தைரியம் தருகிறார். இப்படியே வார்த்தை விளையாட்டு விளையாடி வரும் மாமா, கடைசியாக அந்த விஷயத்தைச் சொல்லும் போது, படிக்கும் வாசகர்கள் நிச்சயம் வாய்விட்டு சிரிப்பர்.
புதிய விஷயத்தை தெரிந்து கொண்டு, அதை எளிமையாக அறிமுகப்படுத்துவதில் அந்துமணிக்கு நிகர் அந்துமணி தான். அதுவரை, பிலிம் காலத்தில் இருந்த போட்டோகிராபி டிஜிட்டலுக்கு மாறுகிறது.
டிஜிட்டல் கேமிரா புகைப்படத் தொழிலுக்கு வரமா, சாபமா என, புகைப்படக்கலைஞர்கள் திகைத்துப்போயிருந்த போது, அந்த விஷயத்தை அருமையாக எழுதி, ‘புதிய விஷயங்களை வரவேற்று அதற்கு பழகி விட்டால், எதற்கும் பயமில்லை...’ என, தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுக்கிறார். அன்று அவர் சொன்னது தான் இன்று வரை நடந்து வருகிறது.
சொத்து சுகங்களை பெற்ற பிள்ளைகளுக்கு எழுதி வைப்பது தான் எல்லாருக்கும் வழக்கம். ஆனால், அன்றைய திருநெல்வேலி ஜமீன்தார் சுந்தரதாஸ் என்பவர், தன் உயிலில், தன் குடிமக்களுக்காக சில உரிமைகளை எழுதி வைத்திருந்தார். அது ஏன் என்பதை, ‘படித்தது’ பகுதியில் விவரித்து எழுதியிருக்கிறார். படிப்பவர் மனதை நெகிழ வைக்கும் நிஜக்கதை அது.
யாருக்கும் அஞ்சாமல்
இந்தியா – இலங்கை எல்லையில் உள்ள கச்சத்தீவு பிரச்னை பற்றி, இந்த புத்தகத்தில் எழுதப்பட்டு இருப்பது போல இவ்வளவு விரிவாக, சரியாக இதுவரை யாரும் எழுதியிருப்பரா என்பது சந்தேகமே... அந்த அளவிற்கு அவனியில் யாருக்கும் அஞ்சாமல் உள்ளதை உள்ளபடியே எழுதியுள்ளார்.
அந்துமணிக்கு வரும் கடிதங்களில் இத்தனை வீரியமிக்க விஷயங்களா என வியக்கும் அளவிற்கு பல கடிதங்கள் அமைந்துள்ளன. அதிலும், இலங்கை தமிழர் ஒருவர், அங்கு நடக்கும் விஷயங்களை விவரித்து எழுதியுள்ள கடிதம், பல அரசியல்வாதிகளை தோலுரித்து தொங்கவிடுகிறது.
நீதி கிடைக்க மட்டுமல்ல; சம்பந்தப்பட்டவர்களுக்கு நிதி கிடைக்கவும் தன் குரலை எழுத்தால், பதிவு செய்துள்ளார் அந்துமணி. குற்றாலீசுவரன் என்ற சிறுவன், தேசிய அளவில் நீச்சலில் சாதனை புரிந்த போதும், அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதை சுட்டிக்காட்டி, உதவவேண்டும் என்று சாதாரண வார்த்தையால் கேட்டுக் கொள்ளாமல், அரசு தத்தெடுத்துக் கொண்டு, ஆதரவு தரவேண்டும் என்று வலிமையான வார்த்தைகளால் வலியுறுத்துகிறார்.
‘நிமுந்தா வானம், கவுந்தா பூமி...’ என்று போர் அடிக்கும் வேலையில் இருந்து, தனக்கு பிடித்தமான விளம்பரதுறைக்கு மாறி, ஜொலிக்கும் ஒரு பெண் மருத்துவர் பற்றி, எழுதி படிப்பவர்கள் அனைவரையும் மாற்றி யோசிக்க வைக்கிறார்.
சினிமா தயாரிப்பாளராக விரும்பி கட்டுக்கட்டான பணத்துடன் வந்த ஒருவரை, கட்டிய துணியுடன் ஓடவிட்ட ஏமாற்றுத்தனத்தை, ஒளிவு மறைவின்றி இவர் விவரித்துள்ள விதம், சினிமா தயாரிப்பாளராக விரும்புபவர்களுக்கு பாடமாக இருக்கும்.
சில நேரம் பா.கே.ப., பகுதி அந்த வாரத்துடன் முடிவு பெறாமல், அந்த வாரத்திற்கான செய்தி தொடர்பான வாதங்களால், அடுத்தடுத்து சில வாரங்களுக்கும் சுவாரசியமாக தொடர்கிறது. எய்ட்ஸ் வந்த பெண் குளிக்கும் குளத்தில், மற்றவர்கள் குளித்தால் அவர்களுக்கும் எய்ட்ஸ் வருமா என்ற சந்தேகத்திற்கு, சமானிய வாசகர் முதல் அந்த துறை வல்லுனர்கள் வரை, மாறி மாறி விளக்கம் தருகின்றனர்.
இது, பா.கே.ப., பகுதியை ஒரு தொடர் போலாக்குகிறது; மேலும், அந்த பகுதியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. படிக்கும் போதே நெஞ்சு கொதிக்கும் அந்துமணி தன் முகத்தை மூடி இருப்பதால் கிடைக்கும் பலன் என்ன என்பதை, இந்த புத்தகம் படிப்பதன் வாயிலாக அறிந்து கொள்ளலாம். தன்னை யார் என்று யாரும் அடையாளம் காண முடியாது என்பதால், மத்திய – மாநில அரசு அலுவலகத்திற்கு ஒரு சாமானியராக செல்கிறார், அங்கு நடக்கும் விஷயங்களுக்கு ஒரு பார்வையாளராக மாறுகிறார்; அந்த அனுபவத்தை அவரது வரிகளில் படித்துப் பார்ப்பது மட்டுமே சரியாக இருக்கும்.
தமிழனை, தமிழன் தான் அதிகம் சுரண்டுகிறான் என்று ஒரு இடத்தில் சொல்லிவிட்டு, உதாரணத்திற்கு, மதுரையில் புழங்கும் மாத வட்டி, ஆண்டு வட்டி, கூட்டு வட்டி, தவணை வட்டி, ரன் வட்டி, மீட்டர் வட்டி என்று உழைப்பவர் உதிரத்தை உறிஞ்சும் வட்டி பற்றி, வாசகர் கடிதத்தின் துணையோடு விவரிக்கிறார். படிக்கும் போதே நெஞ்சு கொதிக்கிறது.
தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டுமே என்பதற்காக, பிரிட்டானியா கலைக்களஞ்சியத்தில் இருந்து படித்த, ‘ஆர்டிசான் ஊற்று’ பற்றி விழிப்புணர்வை எல்லாம் ஏற்படுத்துகிறார்.
இப்படி தமிழ், தமிழர் நலன் பற்றி சிந்தித்து, வாசகர்களின் நாயகனாக விளங்கும் அந்துமணியின், இந்த, பா.கே.ப., – 6வது பகுதி, அவரே கூறியிருப்பது போல, புது வாசகர்களுக்கு ஒரு வரலாற்று குறிப்பாகவும், பழைய வாசகர்களுக்கு கடந்த காலத்தை அசைபோடும் இனிய தொகுப்பாகவும் அமைந்துள்ளது.
‘எல்லாம் சரி இந்த விமர்சனத்தின் ஆரம்பத்தில், வாசகி போட்ட புதிருக்கான விடையை கடைசியில் சொல்கிறேன் என்றீர்களே... இன்னும் சொல்லவே இல்லையே...’ என்று ஆதங்கப்படுவோருக்கு எப்படியும் லென்ஸ் மாமா, அந்துமணியிடம் வைத்த, ‘அந்த’ வேண்டுகோள் விஷயத்தை தெரிந்து கொள்ள புத்தகம் வாங்கப் போகிறீர்கள், அதைப்படிக்கும்
போது, இந்த புதிர் விஷயத்தையும் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.
தாமரை பிரதர்ஸ் மீடியா லிமிடெட் வெளியீடான இந்த புத்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண் 1800 425 7700 (Toll Free) காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை அழைக்கவும். புத்தகம் வீடு தேடி வரும்
– எல்.முருகராஜ்