லஞ்சமூம் ஊழலும் எப்போது துவங்கியது என்பதை வரலாற்று பூர்வமாக வெளிப்படுத்தும் நுால். படிக்கத் துவங்கினால் நம்மைப் பிரமிக்க வைக்கிறது. மனிதன் குகைகளில் வாழ்ந்த காலத்திலேயே லஞ்சம் துவங்கிவிட்டது என்று தெரிவிக்கிறது. பாரசீகம், மெசபெடோமியா, சிந்து சமவெளி, செவ்விந்தியர் எனப் பழைய பெயர்களுடன் லஞ்சமும் தவழ்கிறது.
இரும்பு கிடைப்பதாக இருந்தால் எத்தனை பெண்களை வேண்டும் என்றாலும் லஞ்சமாகக் கொடுக்கத் தயாராக இருந்தனர் என்று தெரிவித்து உள்ளார். ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா என்று கண்டம் தாண்டி லஞ்சம் தலைவிரித்தாடியதையும் எடுத்துக்காட்டுகிறது. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் முன்தோன்றிய மூத்த செயல் லஞ்சம் என்ற புதுமொழியை உருவாக்கியுள்ளார்.
லஞ்ச வரலாற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி, 21 நுாற்றாண்டின் தற்போதைய நிலை வரை காட்டியுள்ளார். 129 அத்தியாயங்களாய் பரந்து விரிந்து செல்கிறது. லஞ்சம் பெற்று ஓட்டு போடுவோரை கடுமையாகவே எச்சரித்து உள்ளார். எந்த அரசியல் கட்சியையும் விட்டுவைக்காமல் தவறு செய்வோரை கொண்டு வந்து நிறுத்திக் காட்டுகிறார். அண்மைக் கால அரசியல் வரலாற்றைக் கூட அச்சம் இல்லாமல் வெளிப்படுத்தியுள்ளார்.
கச்சிதமான வடிவமைப்புடன் கவர்ச்சியான மொழிநடை கைபிடித்து அழைத்துச் செல்கிறது. லஞ்சத்தையும், ஊழலையும் பற்றி இதைவிட எளிமையாகவும், விரிவாகவும் எடுத்துரைக்கும் நுால் இதுவரை வரவில்லை என்று சொல்லலாம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே லஞ்சம் இருந்ததை வெளிப்படுத்துகிறது.
– முகிலை ராசபாண்டியன்