‘தினமலர் – வாரமலர்’ அந்துமணியின் எழுத்துக்கு கிடைத்து வரும் வரவேற்பு, பெரிதும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
குறிப்பாக மணிமேகலை பிரசுரம் லேனா தமிழ்வாணன் மற்றும் அவரது சகோதரர் ரவி தமிழ்வாணன் மூலமாக அந்துமணியின் புத்தகங்களை விரும்பி வாங்கும் வி.ஐ.பி.,க்களை பார்க்கும் போது, சத்தமில்லாமல் எத்தனை பேர் மனதில் அந்துமணி சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கிறார் என்பதை அறிந்து, மகிழ்ச்சி கூடுகிறது.
அவர் பல்வேறு தலைப்புகளில் எழுதி வரும் புத்தகங்களில், ‘பார்த்தது கேட்டது படித்தது’ தொகுப்பு மிகவும் பிரபலமாகி விட்டது. காரணம், அது அவரே சொன்னது போல திறந்த மனதுடன் எழுதப்பட்ட டைரியாக இருப்பதால்!
இதுவரை, பா.கே.ப., ஆறு புத்தகங்களாக வெளியாகி விட்டது. இதோ இப்போது ஏழாவது புத்தகம் வாசகர்கள் கையில் தவழ்கிறது. ஒழிந்தது என்று எண்ணப்பட்ட கொரோனா, மீண்டும் ஊரடங்கு வரை கொண்டு வந்து விட்டதில், மக்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களின் மன உளைச்சலுக்கு மருந்தாக இந்த புத்தகம் அமைந்துள்ளது.
அந்த அளவிற்கு, இந்த ஏழாவது புத்தகத்தில் அந்துமணியின் எழுத்துக்களில், நல்ல பல விஷயங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆரம்பம் முதல் இறுதி வரை, அவர் எழுத்தில் இருக்கும் உற்சாகம், படிக்கும் வாசகர்களுக்கும் கிடைத்து விடுகிறது.
கவர்னர் பதவி தேவையா, இல்லையா என்ற சர்ச்சை, கவர்னர் பதவி உருவான காலத்தில் இருந்து இருப்பது தெரியும். ஆனால், அந்த கவர்னர் பதவி எப்படி உருவானது; அதன் குணாதிசயம் என்ன என்பது குறித்தும் விரிவாக தந்துள்ளார். அவசியம் அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக அரசியல்வாதிகள்!
சர்க்கரை நோய் உலகையே பயமுறுத்தும் என்று, 25 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியுள்ளவர், அதற்கான எளிய தீர்வையும் சொல்லியுள்ளார். இலங்கை அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீதின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் நடந்த சுவாரசியம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.
இந்த புத்தகத்திற்கான அட்டையில் லென்ஸ் மாமா படு ஆக்ரோஷமாக போட்டோ எடுத்துக் கொண்டிருப்பதை பார்த்ததும், ‘சரி... புத்தகம் முழுவதும் ஐயாவோட ராஜபாட்டை அதிகம் இருக்கும்’ என்று நினைத்தால் நேர்மாறான அனுபவமே ஏற்படுகிறது.
இந்த தொகுப்பின் போது லென்ஸ் மாமாவை உ.பா., பக்கமே போகக்கூடாது என்று டாக்டர் சொல்லிவிட்டதால், லென்ஸ் மாமா பெரும்பாலும் கடுகடுப்புடனே காணப்படுகிறார். அதிலும் அந்துமணியின் நண்பரான பெரியவர் பெரியசாமி அண்ணாச்சி வேறு, நேரம் கிடைக்கும் போதெல்லாம், ‘யோவ் லெஞ்சு... பஜ்ஜிய ஒரு மனுஷன் இப்படியாய்யா ‘லவுக் லவுக்’குன்னு திம்பாங்க...’ என்று அவரை, ஒரு பஜ்ஜியைக் கூட தன் இஷ்டத்திற்கு சாப்பிட விடாமல் கடுப்பேற்றுகிறார்.
அவ்வப்போது செம, ‘மூடில்’ அண்ணாச்சி திருநெல்வேலி பாைஷயில் வெளுத்து வாங்குவதை, அதே மொழி நடையில் எழுதுவது, அந்துமணிக்கு மட்டுமே சாத்தியமான ஒன்றாகும். ‘ஒத்தையடிப் பாதையல, நட்ட நடு ராவுல ஒருத்தன் போயிட்டிருந்தான் டே... அப்ப வழியில இன்னொருத்தன் சேந்துக்கிட்டான். வந்தவன்கிட்ட இவன் எனக்கு பேய் பிசாசு நம்பிக்கை கிடையாது’ன்னானாம்.
‘எனக்கும் நம்பிக்கை இல்லைன்னு சொல்லிட்டு, வந்து சேர்ந்தவன் மறைஞ்சுட்டனாம்’ என்று சொல்லி, ‘இடி இடி’யென சிரிக்கிறார். இதை எல்லாம் கேட்ட லென்ஸ் மாமா தாங்க முடியாமல், டாக்டரின் அட்வைசையும் மீறி சரக்கடிக்க ஒரு பார்ட்டிக்கு கிளம்பி விடுகிறார். பார்ட்டியில் தரப்பட்ட, ‘எலிபன்ட் பஞ்ச்’ என்று எல்லாம் கலந்த சரக்கை சாப்பிடுகிறார்.
‘இந்த சரக்கை சாப்பிட்டால் யானை உதைப்பது போல போதை இருக்குமாம். அதனால் தான், இந்த சரக்கிற்கு அந்தப் பெயராம்’ லென்ஸ் உடன் சென்றிருந்த அந்துமணி, அந்த நேரத்தில் உபயோகித்த வார்த்தை பதம் தான், ‘குபீர்’ சிரிப்பை வரவழைக்கிறது. லென்ஸ் மாமா கிறக்கத்திற்கு உள்ளாவதை, ‘மாமாவை யானை உதைக்க ஆரம்பித்தது’ என்று எழுதியிருப்பார்.
அதன்பிறகு லென்ஸ் மாமா பேசிய பேச்சைக் கேட்டால், அந்த யானையே ஏன்டா இவரை உதைத்தோம் என்று நொந்து போகிற அளவிற்கு, உள்ளூர் முதல் உலக அரசியல் வரை, ஆளேயில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த புத்தகத்தில் அந்துமணி நிறைய விஷயங்களை எழுதியுள்ளார்.
‘மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் அம்மாக்கள் அவ்வளவு சீக்கிரத்தில் ஏன் மருமகளை ஏற்றுக் கொள்வதில்லை; தன்னிடம் இருந்து மகனை பிரித்து விடுவாள் என்ற பயம் தான் காரணமா?’ என்ற தலைப்பில் விரிவான அலசல் செய்யப்பட்டுள்ளது.
அந்துமணியைப் பொறுத்தவரை மற்ற எழுத்தாளர்களைப் போல, எடுத்த உடனே தானே அறிவுஜீவியாக மாறி ஆலோனை வழங்குவது இல்லை. வாசகர்களின் ஆலோசனையை ஆர்வத்துடன் கேட்ட பின்னரே, தன் கருத்தை எடுத்து வைப்பார்.
இதன் காரணமாக இந்த மாமியார், மருமகள் பிரச்னை சில வாரங்களுக்கு பல மாமியார் – மருமகள்களால் விமர்சிக்கப்படுகிறது. படிக்கும் வாசகர்களாகிய நமக்கு இதன் பல்வேறு கோணங்கள் புரிபடுகின்றன. மகனிடம் பேசத்தயங்கும் மாமியார்களும், கணவனிடம் சொல்லத் தயங்கும் மருமகள்களும் அந்துமணியிடம் தங்கள் மனதை எழுத்தால் திறந்து காட்டியுள்ளனர்.
இந்த வாத – பிரதிவாதங்களை படித்தால், புதிதாக திருமணமாகப் போகும் ஆண், பெண் எளிதாக வாழ்க்கையில் வெற்றி நடைபோடலாம் என்பது மட்டும் நிச்சயம். அதே போல, இந்தியாவில் பிறந்து இந்தியாவில் படித்து, வெளிநாடு சென்று ‘செட்டில்’ ஆனவர்கள், இந்தியாவைப் பற்றி வைக்கும் விமர்சனம், வெளிநாட்டினரை விட மோசமாக இருக்கும்.
அப்படி ஒரு வாசகர், இந்தியாவின் வறுமையை, அசுத்தத்தை, ஜாதி, மத மோதலை, அரசியலை, வேலையின்மையை, பிச்சைக்காரர்கள் தொல்லையை என்று பல பிரச்னைகளை சுட்டிக்காட்டி எள்ளி நகையாடி, அந்துமணிக்கு கடிதம் எழுதியிருப்பார்; அந்தக்கடிதத்தையும் அப்படியே பிரசுரித்துள்ளார் அந்துமணி.
படிக்கும் யாருக்கும், ‘ஆமாம் அந்த வெளிநாட்டு இந்தியர் சொன்னதில் என்ன தப்பு? சரியாயத் தானே சொல்லியிருக்கிறார்...’ என்றே தோன்றும் ஆனால், அவருக்கு அவரது வார்த்தையில் இருந்தே அந்துமணி பதிலடி தந்திருப்பார் பாருங்கள்... பிரமாதம்! நாடி நரம்புகளில் தேச பக்தி நிரம்பி வழியும் ஒருவரால் தான் இப்படி ஒரு பதிலை தரமுடியும்.
படிக்கும் போதே உணர்ச்சியை தட்டியெழுப்பும் அந்த நீண்ட பதிலை புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்; அதன் பிறகு அந்தப் பதிலை, அவரது பதிவை நிச்சயம் நீங்களும் பலருக்கு பகிர்வீர்கள். கண் எதிரே ஒரு தவறு நடக்கும் போது அதை தட்டிக் கேட்காதவன் என்ன மனிதன் என்று எல்லாரும் சொல்வர்; ஆனால், செயல்பட மாட்டார்கள்.
ஆனால், அந்துமணி அப்படியில்லை! பெண்மைக்கு கேடு நேர்ந்த அதே நிமிடத்தில் துள்ளிக் குதித்துச் சென்று, சம்பந்தப்பட்டவரை தனியொருவராக துவம்சம் செய்கிறார் அப்படி ஒரு சம்பவம் தியேட்டரில் நடக்கும் போது, அங்கு கூடியிருந்த பெண்கள் மத்தியில் திரையில் தோன்றாத நிஜ ஹீரோவாக நம் அந்துமணி பலரது பாராட்டைப் பெற்று அன்று ஜொலித்ததைப் போலவே, புத்தகம் படித்து முடிக்கும் போது வாசகராகிய உங்கள் மனதிலும் ஜொலி ஜொலிப்பார்.
– எல்.முருகராஜ்