இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் கோவில்களும் போராட்ட மையங்களாக விளங்கியுள்ளன. விடுதலை தாகத்தால் சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிய தியாகி தியாகராஜன் வாழ்க்கை வரலாற்றை, தொல்லியல் அறிஞர் தியாக சத்தியமூர்த்தி ஆங்கிலத்தில் தொகுப்பு நுாலாகப் படைத்துள்ளார். தமிழில், வகுளா வரதராஜன் மொழி பெயர்த்துள்ளார். எளிய நடையில், நேரடியாக பேசுவது போல் அமைந்துள்ளது.
தியாகி தியாகராஜனின் 88 ஆண்டு கால வாழ்க்கையை அவர் எழுதிய குறிப்புகளில் இருந்து, 18 அத்தியாயங்களில் படம் பிடித்துக் காட்டியுள்ளார் தொகுப்பாசிரியர். வாழ்க்கை சம்பவங்களுடன் தொடர்புடைய படங்களையும் தொகுத்து பதித்து சிறப்பித்துள்ளார்.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு குடும்பம் அந்தக் காலத்தில், பல இன்னல்களுக்கு ஆளானது என்பதை ஒரு கதை போல் அற்புதமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. விடுதலைக்காக வாழ்க்கையில் பலவற்றை இழந்தாலும், விடுதலைக்குப் பின் நிம்மதியான பெருவாழ்வு நிலையை அடைவது உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்டுள்ளது.
இருபதாம் நுாற்றாண்டின் தொடக்க காலத்தில், பிராமணர் வகுப்பு குடும்ப வாழ்க்கை நடைமுறை எப்படி எல்லாம் இருந்தது என்பது மிகத் துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எட்டு வயதுக்குள்ளாக தாயையும், தந்தையையும் இழந்த ஏழை பிராமணக் குழந்தை படும் இன்னல், நெஞ்சை உருக்கும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளது.
தியாகி தியாகராஜன் வாழ்க்கை வரலாற்றில், அவரது அம்மா சிவகாமியும், சித்தி ஜானகியும் வாழ்ந்ததை ஒவ்வொரு பெண்ணும் எண்ணிப் பார்த்து சித்திக்க வேண்டியதை வாசிப்பு உணர்த்தும். அந்த கால சமூகத்தில் பெண்களின் நிலை எப்படி இருந்தது என்பதையும் ஆழமாக சித்தரிக்கிறது. நிகழ்வுகள் அழிக்க இயலாத சோகச் சித்திரங்களாக அமைந்துள்ளன.
அந்த துன்பக் கதையை எண்ணிப் பார்க்க இயலாத அளவில் உள்ளத்தை உறைய வைக்கிறது. திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் கணவனை இழந்த பெண் சந்திக்கும் பிரச்னைகள் இயல்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்திய விடுதலை போராட்டத்தின் ஒரு பகுதி வரலாற்றையும், சமூக வரலாற்றையும் இணைத்து வழங்கும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்