பிரபஞ்சத்தில் பிறக்கின்ற, ‘நான்’ என்ற ஆத்மாவை அறிய எண்ணுவோர் படிக்க வேண்டிய நுால். பாதராயணர் என்பவரால் தொகுக்கப்பட்டது. கவத்கீதைக்கும் முற்பட்டது என்றும் கூறுவர். நுாலில், 555 சூத்திரங்கள் நான்கு அத்தியாயங்களில் விளக்கப் பட்டுள்ளன. பெரும்பாலும் ஆதிசங்கரரின் உரை விளக்கப்பட்டிருந்தாலும், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீமத்வர் விளக்கங்களும் தேவையான இடங்களில் உள்ளன.
பிரம்ம சூத்திரம் வேத உபநிஷங்களின் சாரம் என்றும், ஆத்மா எந்த ஒன்றில் இருந்தும் பிறப்பதில்லை. உடல் அழிந்தாலும் அதுஅழியாது என்றும், பாலினுள் இருக்கும் வெண்ணெய் போல ஜீவனுக்குள் ஆன்மா இருக்கிறது என்றும் உரைக்கிறது.
உண்மையோடும், தக்க ஒழுக்கமுறைகளோடும் இருந்தால் இறைவனை அங்கு காண இயலும் என்றும் குறிப்பிடுகிறது. திருமூலர், காகபுகண்டர், அழுகணிச்சித்தர், தாயுமானவர், பத்ரகிரியார் பாடல்கள் தேவையான இடங்களில் விளக்கிக் கூறியுள்ளது பொருத்தமாக உள்ளது. மெய்ப்பொருளாகிய பிரம்மத்தை விளக்கும் நுால்.
– டாக்டர் கலியன் சம்பத்து