தமிழ் இலக்கண, இலக்கிய நுால்கள் மற்றும் தமிழக வரலாற்று மீட்பிற்குப் பெரும் பங்காற்றியவர் உ.வே.சா., அவரது இளமைக் காலமும் துவக்க நிலை தமிழ்க் கல்வியும், பெரம்பலுார் மாவட்டத்தில் சில கிராமங்களோடு பின்னிப் பிணைந்திருந்தது.
பிறந்தது தஞ்சை மாவட்டமாக இருந்தாலும், கற்றதும், அவரது குடும்பத்தை தாங்கிப் பிடித்ததும், பெரம்பலுாரே என சான்றுகளோடு நிறுவப்பட்டுள்ளது. உ.வே.சா.,வின் தந்தை அரியலுார் ஜமீனில் பணியாற்றியது, அந்த ஜமீன் நொடித்துப் போனது போன்ற விபரங்கள் உள்ளன.
அக்காலகட்டத்தில், அந்த பகுதி மக்களே உ.வே.சா., குடும்பத்தை ஆதரித்தனர். கடன் தொல்லையால் அவதிப்பட்ட உ.வே. சா.,வின் குரு, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அப்பகுதி மக்கள் பற்றி அறிந்து, தானும் அங்கே வரலாமா? என்று கேட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிற்சேர்க்கையாக அமைந்துள்ள உ.வே.சா.,வின், ‘அருளுறை நீலி இரட்டை மணிமாலை’ என்ற நுாலும், ‘வெங்கனுார் கோவில் சிற்பம்’ என்ற தலைப்பிலான கட்டுரையும் அரிய தமிழ்க் கருவூலம். வட்டார வரலாற்றில் அவதானிப்புக்குரியதாக விளங்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்