வங்கிப் பணியில் உயர்ந்த பதவி வகித்த சமூக ஆர்வலரின் வாழ்க்கை வரலாறு பற்றியது இந்த நுால். படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று, சிண்டிகேட் வங்கி தலைவர், நிர்வாக இயக்குனராக விளங்கியவர் மெய். ரூஸ்வெல்ட். இவரது வாழ்க்கையில் நிகழ்ந்த செய்திகளை ஒரு நாவலைப் படிப்பது போல புனைவு இல்லாமல் நல்ல மொழிநடையில் சுவையாக எழுதியுள்ளார் நுாலாசிரியர்.
பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு விழாவை ஆண்டுதோறும் நடத்தி, அவரது பெயரில் விருது வழங்கி கொண்டாடி வரும் ரூஸ்வெல்ட், பணிபுரிந்த காலங்களிலும், அதன் பிற்பாடும் பலருக்கும் உதவிய பண்பாளர். அவரது பன்முக ஆற்றலை புலப்படுத்தும் நுால். பல நிறுவனங்களிலும், சங்கங்களிலும் இணைந்து திறம்பட செயல்படுபவர் என்பதை, பல கோணங்களில் அணுகி கவித்துவத்தோடு எழுதப்பட்டுள்ளது.
வங்கிப் பணியில் நேர்ந்த சோதனைகளைச் சாதனைகளாக்கி உச்சம் தொட்டதோடு, பணியின்போது மாற்று கருத்துடையவர்களிடம் மென்மையாக அறிவுரை கூறி, முன்னேற்றத்திற்கு ஆவன செய்திருப்பதையும் குறிக்கத் தவறவில்லை.
டில்லி தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவியது, ஏழை எளியோருக்கு வங்கிக்கடன் பெற உதவியது முதலான நிகழ்வுகள், ரூஸ்வெல்டின் நற்பெயருக்குச் சான்றாய் அமைகின்றன. மனிதநேயத்தையும், மொழி ஆர்வத்தையும், உதவும் பாங்கையும் வெளிப்படுத்துகிறது. ரூஸ்வெல்ட் என்ற பெயரை, ரூசவெல்ட் என்றே நுால் முழுதும் குறித்திருப்பது, நுாலாசிரியரின் தமிழ் ஈடுபாட்டைக் காட்டுவது போல் உள்ளது.
– ராம.குருநாதன்