நாற்பது வயதுக்கு உட்பட்ட 25 கவிஞர்களின் கவிதை தொகுப்பு நுால். இருபதாம் நுாற்றாண்டின் பிற்பகுதியில், தமிழ் வெளியில் எதிர்ப்புகளைத் தாங்கியபடி தோன்றியது புதுக்கவிதை வடிவம். இதை தொடர்ந்து, எழுதுபவர்கள் எப்படி படைக்கின்றனர் என்பதை எடுத்துரைக்கிறது.
வாழ்வியலில், மனிதர்களின் மனவெளிகள் எப்படி இருக்கின்றன என்பதை, இந்தக் கவிதைகள் உணர்த்துகின்றன. ஒரு காட்சியைக் காட்சிப் படிமமாக்கி, கண்முன் நிறுத்தும் கலையில், கவிதைகள் வெற்றி காண்கின்றன.
விஷ்ணுகுமாரின் நுாதனக் கிறுக்கனும், கு.அ.தமிழ்மொழியின் மனமும், மனதில் கீறலை உண்டாக்குகின்றன. இடம் மாறுகின்ற காட்சிகளில், கடலைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மலைவெளிக்குப் பறந்து விட முடிகிறது.
இருபத்தோராம் நுாற்றாண்டு போக்கை இக்கவிதைகள் அறிமுகம் செய்கின்றன. தொகுப்புக்குத் தமிழவன் வழங்கியுள்ள முன்னுரை, புதுக்கவிதையின் தடை தாண்டிய பயணத்தை எடுத்துரைக்கிறது. புதிய புதுக் கவிஞர்களைப் புதுப் பார்வையுடன் அறிமுகம் செய்யும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்