சேரர், சோழர், பாண்டியரின் விரிவான வரலாற்றை, இலக்கியங்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் முரண்களற்ற தொகுப்பைக் கொண்டு வந்ததாக முன்வைத்து வெளிவந்துள்ள நுால்.
மூவேந்தருக்கும் மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டு, ஒவ்வொரு நாட்டின் நிலப்பரப்பு, நாட்டு வளங்கள், நீர் வளங்களின் அமைப்புகள், தொல் வரலாறு, மன்னர்களின் ஆட்சி சிறப்புகள், படையெடுப்புகள், போரிழப்புகள், எழுச்சிகள், வீழ்ச்சிகள் போன்றவற்றை நிரல்படத் தந்திருப்பது வாசிப்புக்கு எளிதாக உணர முடிகிறது.
கல்வெட்டு, செப்பேடுகள், இலக்கியங்கள் ஆகியவற்றைக் கொண்டு பதிவு செய்யப்பட்ட வரலாற்று ஆய்வுகளை மீள்பார்வை செய்து தோன்றிய முரண்களையும் கருத்தில் கொண்டு விளக்கங்கள் தந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சங்க காலத்திலிருந்து துவங்கும் சேரர் வரலாறு, களப்பிரர் காலத்திற்குப் பின்பெழுந்த சேர நாடு, பாண்டியரோடு போர்த் தாக்குதல்கள், ராஜராஜன் காலத்துக்குப் பின்பான சேர நாட்டின் உருக்குலைவு, தலைநகர விவாதங்கள், உதியன் வழி, பொறையன் வழி சேர மன்னர்களின் ஆளுமைச் சிறப்புகள் போன்றவை சேரர்களின் மாறுபட்ட வரலாற்றுத் தடத்தைப் புலப்படுத்துகின்றன. வரலாற்று ஆர்வலர்கள் ஆய்வு நோக்கில் படிக்க வேண்டிய அரிய நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு