‘டிஜிட்டல்’ வகை ஆவணங்களை பாதுகாப்பாக கையாள வழிகாட்டும் நுால். காலத்தின் தேவை கருதி எழுதப்பட்டு உள்ளது. கணினி, அலைபேசி போன்ற தொடர்பு கருவிகள் இல்லாமல் வாழ முடியாது என்ற காலத்தில் வாழ்கிறோம். முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் வடிவில் உருவாகி வருகின்றன. அவற்றை சேமித்து பாதுகாக்க முறையான வழிகாட்டுதல் தேவை. அந்த தேவையை நிறைவு செய்கிறது இந்த நுால்.
தனிப்பட்ட மின்னணு ஆவணங்களை அறிமுகம் செய்யும் வகையில் முதல் கட்டுரை உள்ளது. போட்டோ, ஆடியோ, வீடியோ, மின்னஞ்சல், தனிப்பட்ட டிஜிட்டல் ஆவணங்கள், இணையதளம், வலைப்பதிவு மற்றும் சமூக ஊடகங்களில் பதிவாகும் மின்னணு தகவல்களை பற்றி மிகத் தெளிவாக விளக்குகிறது.
அவற்றை ஆவணப்படுத்தி பாதுகாப்பாக கையாளும் வழிமுறைகளை எளிய நடையில் சொல்கிறது. பாதுகாப்புக்கு உள்ள அச்சுறுத்தலையும் சுட்டிக்காட்டி, தடுக்கும் வழிமுறையை சொல்கிறது. சிறு தலைப்புகளில் குழப்பமின்றி, விளக்க படங்களுடன் தகவல்கள் உள்ளன. முக்கிய தொழில்நுட்ப அறிவை எளிய மொழிநடையில் தரும் அற்புத நுால்.
– அமுதன்