வரலாற்றுச் சிறப்பு மிக்க கொங்கு மண்டலத்தின் நிர்வாக முறைக்கு சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்ந்த பட்டக்காரர்கள், பாளையக்காரர்கள் பற்றிய வரலாற்றை தொகுத்துக் கூறும் நுால்.
கொங்கு மண்டல வட்டாரத் தலைவர்களான பட்டக்காரர்கள் 11 பேரின் ஆளுமை மற்றும் 29 பாளையக்காரர்களின் ஆளுமை ஆகியவை வரலாற்று நிலையில் சொல்லப்பட்டுள்ளன. வரலாற்று நுால்களில் இதுவரை அறியப்படாத பாளையக்காரர்கள் பற்றிய தகவல்களையும், பட்டக்காரர் பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.
கொங்கு மண்டலச்சதகம், மெக்கன்சி குறிப்புகள் போன்ற அகச்சான்றுகள் மூலமும், கல்வெட்டு போன்ற புறச்சான்றுகள் மூலமாகவும் வரலாற்றுத் தகவல்களை வெளிக்கொணர்ந்திருப்பது பாராட்டுக்குரியது.
வரலாற்றுச் செய்திகள் வம்சாவளியோடு விளக்கப்பட்டுள்ளன. அவர்கள் பிற்காலச் சோழர்களோடு தொடர்பு கொண்டமை, கோவில், குளம் போன்ற நற்பணிகள் மேற்கொண்டமை, அணைகள் கட்டியமை, அவர்கள் செய்த போர்கள், புலவர்களை ஆதரித்து போற்றியமை முதலான தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. அரிய முயற்சி நன்கு வெளிப்படும் விதத்தில் அமைந்துள்ள நுால்.
– ராம.குருநாதன்