யந்திர தகடுகளை வைத்துக் கொள்ளும் வழக்கமானது, மூடத் தனமான எதிர்பார்ப்புடன், சுய முன்னேற்ற முயற்சிகளை முடக்கும்; சோம்பேறித்தனத்தை வளர்க்கும்; விபரீத விளைவுகளுக்கு இடம் கொடுக்கும்; விஷப்பரிட்சைக்கு ஆளாக்கும்.
யந்திர தகடுகளை வைத்து, அவற்றின் மூலம் என்ன பெறலாம் என்று எதிர்பார்ப்பதை விட, ஆக்கப்பூர்வமான தொழில் துறை இயந்திரங்களை உரிய முறையில் பயன்படுத்தி, நாமே ஒரு உன்னத இயந்திரமாக மாறி உழைப்பதே உயர்ந்தது!
பல லட்சம் வாசகர்கள் படித்துப் பயன் பெற, தொடர்ந்து எழுதி வரும், நம் அந்துமணியின், ‘லேட்டஸ்ட்’ புத்தகமான, ‘பார்த்தது, கேட்டது, படித்தது – ௧௦ம்’ பாகத்தில் இடம் பெற்றுள்ள கருத்துக்களில் ஒன்று தான் மேலே உள்ளது.
இது போல யாருக்கும் அஞ்சாத, எதற்கும் பணியாத, துணிவான மூடநம்பிக்கைக்கு எதிரான, பற்பல கருத்துக்கள், இந்த புத்தகத்தில் நிறையவே இடம் பெற்றுள்ளன.
ரசிகர் மன்றம் என்ற பெயரில் காலத்தையும், காசையும் வீணாக்கும் இளைஞர்களிடம், அவர்களது கதாநாயகன் மற்றும் கதாநாயகிகளின் உண்மை முகத்தை, மென்மையாக சொல்லி திருத்த முற்படுகிறார்.
‘இங்கே நான் தான் நாட்டாமை; நான் தான் தீர்ப்பு சொல்வேன்...’ என்றெல்லாம் அடம் பிடிக்காமல், ‘எனக்கு இந்த விஷயம் பிடிபடவில்லை வாசகர்களே... கொஞ்சம் உதவ முடியுமா?’ என்று வாசகர்களிடம் திறந்த மனதுடன் கருத்து கேட்கிறார்.
கவுரவமாக பிழைக்கலாமே இதுதான் அந்துமணியின் மிகப்பெரிய பலமே! வாசகர்களிடம் அவர்களுக்கு பயன்படக்கூடியதை மட்டுமே கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே, ரொம்பவே மெனக்கெடுவார்; இந்தப் புத்தகத்தில் உள்ள பல விஷயங்கள், அதை தெளிவுபடுத்துகின்றன.
இவரது வாசகர் வட்டத்தில் எல்லா தரப்பினருமே இருப்பதும் ஒரு அதிசயமே!
புத்தகத்தில் ஓர் இடத்தில், விலைமாதர் பற்றி எழுதுகையில், தன்னையும், சமூகத்தையும் பாழாக்கிக் கொண்டு இந்த தொழில் செய்வதை விட, மில்லில் வேலை செய்து கவுரவமாக பிழைக்கலாமே என்று எழுதி இருந்தார், அந்துமணி.
இதற்கு பதிலாக ஒரு விலைமாதரே கடிதம் எழுதியிருந்தார்; எழுதியிருந்தார் என்பதை விட, எரிமலையாக வெடித்திருந்தார் என்றே சொல்லலாம்.
நீளமாக எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில், ஆண்கள் பலரையும் துவைத்து தொங்க விட்டிருந்தார்.
‘நானே மில் வேலை பார்த்த போது சூப்பர்வைசர், மேனேஜர் என்ற மிருகங்களால் வேட்டையாடப்பட்டு, இந்த நிலைக்கு வந்தவள் தான். எங்களை இந்த சமூகம் எங்கே கவுரவமாக வாழ விட்டது.
‘பணத்தாலும், பந்தத்தாலும், பதவியாலும், உடல் பசியாலும் எங்களை பாழாக்கிய இந்த ஆண் சமூகம் ஒன்றும் உயர்ந்ததில்லை; மனதால் எங்களை விட மோசமானவர்கள்...’ என்று கடுமையான வார்த்தைகளால் ஒரு நீளமான கடிதம் எழுதி, ‘இதை எல்லாம் உங்களுக்கு படிக்கக்கூட நேரமிருக்காது; நேராக குப்பைக் கூடைக்குத் தான் போகும் என்று தெரியும்.
‘ஆனாலும், என் உள்ளத்தில்
இருப்பதை இறக்கி வைத்த திருப்தி
இருக்கிறது...’ என்று முடித்திருந்தார்.
ஆச்சரியம் என்னவெனில், நம்
அந்துமணி அவரது கடிதத்தை
அப்படியே வெளியிட்டு இருந்தார்.
இதை சிறிதும் எதிர்பாராத அந்த வாசகி, அடுத்த கடிதத்திலேயே, ‘எங்கள் குரல் கேட்கவும், எங்களுக்காக குரல் கொடுக்கவும், எங்கள் மீது அக்கறை படவும், எங்களையும் சக மனுஷியாக நேசிக்கவும், அந்துமணி என்ற அன்புள்ளம் கிடைத்து விட்டது...’ என்று குறிப்பிட்டு, அவரது வாழ்க்கையில் குறுக்கிட்ட பிரபலங்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறார். அந்த அனுபவங்கள் அப்பப்பா... புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அந்துமணி என்ற அன்புள்ளம் கடந்த இரண்டு பாகங்களில் ஓய்வில் இருந்த அந்துமணியின் நண்பரான பெரியசாமி அண்ணாச்சி, இப்புத்தகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளார்.
அவரது நகைச்சுவை காரணமாக, இந்த புத்தகம் நகைச்சுவை சிறப்பிதழாக மலர்ந்துள்ளது என்று கூட கூறலாம். அதிகம் படிக்காத அவர், நெல்லைத்தமிழில், ‘நானும் ஆங்கிலத்தில் பேசுவேன்...’ என்று அடம் பிடித்ததன் எதிரொலியாக வந்து விழும் வார்த்தைகள், படிக்கும் வாசகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடும்.
சினிமா எடுக்கும் ஆசையில் உள்ள ஒரு கதாசிரியர், சீரியசாக தன் கதையை சொல்லியபடியே போகிறார்.
அப்போது, அந்துமணியின் உடன் இருந்த அண்ணாச்சி, ‘தம்பி... இந்த இடம் சூப்பரு; ‘லுாஸ் மோஷன்’ல காட்டிரலாம்...’ என்பார்.
அண்ணாச்சி அப்படி சொன்னதைக்கேட்டு, ஒரு கணம் யாருக்கும் எதுவும் புரியவில்லை. அதன்பின், லென்ஸ் மாமா, பற்களை, ‘நறநற’வென கடித்து, ‘அண்ணாச்சி... அது ‘லுாஸ் மோஷன்’ இல்ல; ஸ்லோ மோஷன்...’ என்கிறார்.
‘ஆண்டி செப்டிக் பைல்’ மற்றொரு சமயத்தில், சோகமாக இருந்த அண்ணாச்சியிடம், சோகத்திற்கான காரணம் கேட்க, ‘நம்ம ஆளு ஒருத்தன் எக்குதப்பா போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டான். அவனுக்கு, ‘ஆண்டி செப்டிக் பைல்’ வாங்கிறதுக்குள்ள, தாவு தீர்ந்து போச்சு...’ என்கிறார்.
அவர், ‘ஆண்டிசிப் பேட்டரி பெயில்’ என்ற வார்த்தையைத் தான் அப்படிச் சொன்னார் என்பதை புரிந்து அனைவரும் சிரிக்க, ‘நாம சோகத்துடன் சொல்ற விஷயத்திற்கு இந்த பயலுக ஏன் இந்த சிரிப்பு சிரிக்கிறானுக...’ என்று யோசிக்கிறார்.
இந்த பா.கே.ப., புத்தகத்திற்குள் குட்டியாக ஒரு பயணக் கட்டுரையும் ஒளிந்திருக்கிறது. தாய்லாந்திற்கு சென்று, அங்கு மோட்டார் டாக்சியில் பயணித்த அனுபவம் உட்பட, பல விஷயத்தை சுவைபட சொல்லி இருக்கிறார் அந்துமணி.
தாய்லாந்து போவதை அறிந்த அண்ணாச்சி, ‘நானும் வருதேன்... எங்கிட்டேயும், ‘பாஸ்புக்’ இருக்கு; ‘மிசா’ எடுத்துரலாம்...’ என்பார்.
இவ்வளவு நேரத்திற்கு, வாசகர்கள் பாஸ்புக் என்பதை ‘பாஸ்போர்ட்’ என்றும், மிசா என்பதை ‘விசா’ என்றும் புரிந்திருப்பர்.
ஆனால், என்ன காரணமோ அண்ணாச்சியை தாய்லாந்திற்கு அழைத்துச் செல்லாமல், கழட்டி விட்டு விட்டனர். அதில், அண்ணாச்சியை விட நமக்கு தான் அதிகம் வருத்தம்; சென்றிருந்தால் எத்தனை, ‘ஜோக்’ கிடைத்திருக்கும்.
இந்த இதழையும் தகவல் சுரங்கமாகவும் எடுத்துக் கொள்ளலாம். நாம், ‘குழந்தையா இருக்கச்சே...’ காலத்தில் இருந்து, இன்று வரை பாடப்படும், ‘அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா’ என்ற பாடலை இயற்றியவர் யார் என்பது உட்பட, பலவித குறிப்புகள் புத்தகம் முழுவதும் படிக்க கிடைக்கின்றன.
சாதனை படைக்கும் எழுத்தாளர்கள் எழுத்தையும், எண்ணத்தையும் தன் இரு கண்களாக பாவிக்கும் நம் அந்துமணி, சாதனை படைக்கும் எழுத்தாளர்கள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும், அவர்களைப் பாராட்டும் முதல் ஆளாக இருக்கிறார்.
சம்பல் பள்ளத்தாக்கை கலக்கிக் கொண்டிருந்த, பயங்கர கொள்ளையன் பீரங்கியின் பிடியில் சிக்கிய சஞ்சய்குமார் என்ற பத்திரிகையாளரின் அனுபவத்தை தொகுத்திருக்கிறார் பாருங்கள்... அவ்வளவு விறுவிறுப்பு!
படிக்கும் போதே சிலிர்க்க வைக்கும் அந்த அனுபவத்தை, நீங்களும் புத்தகம் வாங்கி படித்துப் பாருங்கள்!
அந்துமணியின் புத்தகங்களை நேசித்து, தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் எனக்கு, ஒவ்வொரு புத்தகத்தையும் படித்து முடிக்கும் போதும், ‘இது தான் அவர் எழுதியதிலேயே மாஸ்டர் பீஸ்...’ என்ற எண்ணம் வரும்.
ஆனால், அந்த எண்ணம் அடுத்த புத்தகம் படித்ததும் மாறி விடும்; இன்றைய தேதிக்கு, இந்த புத்தகம் இப்போது எனக்குள் அந்த எண்ணத்தையே விதைத்துள்ளது!
தாமரை பிரதர்ஸ் மீடியா லிமிடெட்
வெளியீடான இந்த புத்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்
1800 425 7700 (Toll Free)
75500 09565 (Only)
காலை 7:00 மணி முதல்
இரவு 7:00 மணி வரை அழைக்கவும்.
புத்தகம் வீடு தேடி வரும்
– எல்.முருகராஜ்