விண் உலகத் திருப்பதி என்று அழைக்கப்படும் திருப்பாற்கடல், ஸ்ரீவைகுண்டம் தவிர, 106 திவ்ய தேசங்கள் குறித்த செய்திகளை தரும் நுால். பஞ்சரத்ன திருத்தலங்கள், சுயம்பு கோவில்கள், திருநாங்கூரில் உள்ள 11 திவ்ய தேசங்கள், நவதிருப்பதிகள் ஒன்பது குறித்து முன்னுரையில் விளக்கியுள்ளது, படிக்கும் ஆர்வத்தை துாண்டுகிறது.
ஸ்ரீரங்கம் முதல், திருமயம் வரை உள்ள 106 திவ்ய தேசங்கள் குறித்த சிறப்புகளை தந்துள்ளார். மூலவர், உற்சவர், தாயார், தீர்த்தம், தல விருட்சம், விமானம், மங்களாசாசனம் செய்த ஆழ்வார்களின் விபரம், கோவில் முகவரி, திறந்திருக்கும் நேரம், தொடர்பு எண் விபரத்தையும் தந்துள்ளது பெருமை சேர்க்கிறது.
அபிஷேகம் இல்லாத மூலவராக திருப்பதிசாரம் கோவில் உள்ளதை விளக்குவது, ஆன்மிகத் தேடலின் சிறப்பை கூறுகிறது. ஆன்மிக அன்பர்களுக்கு தேவையான திவ்ய தேசங்களின் அகராதி நுால்.
– டாக்டர் கலியன் சம்பத்து