சுவைமிக்க சிறுகதைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் நுால். கதைகளை எடுத்தால் படிக்காமல் வைக்க முடியாது. ‘கரும தசை’ என்ற கதை, இறப்பு காரியம் செய்ய ஒருவன் ஜாதகத்தில் இருப்பதைக் குறிக்கிறது. தாய்க்கு இறப்பு காரியம் செய்ய வேண்டியிருக்கும் என கவலைப்பட்ட வேளையில், தந்தை இறந்து விடுவதாக முடிகிறது கதை. ஜாதகம் சரி தான்; நினைப்பு தான் தவறு என கதை உணர்த்துகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணைக் கெடுத்தவன், அவளையே பெண் பார்க்க வருவதாகச் செல்கிறது, ‘விதி’ என்ற கதை. உடலில் அவன் போட்டிருந்த, ‘சென்ட்’ மணத்தால் அதை கண்டறிகிறாள் பெண். அவனைத் தண்டிப்பதுடன் முடிகிறது.
எளிய மொழி நடையும், விரைவாக கதை சொல்லும் உத்தியும் ஆர்வத்தை துாண்டுகிறது. கவரும் வகையில் படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
– முகிலை ராசபாண்டியன்