புகழ் பெற்ற வைணவத் திருத்தலமான ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் பாதுகை பெருமைகளைப் போற்றி சுவாமி வேதாந்த தேசிகர், 32 பத்திகளாக இயற்றிய 1,008 சமஸ்கிருத சுலோகங்களுக்கு, எளிய தமிழில் விளக்கம் தரும் நுால். ஆன்மிக ஈடுபாட்டின் மிகை நிலையில் இயற்றியதாகக் கூறப்பட்டுள்ளது. சுலோகங்களில், பாதுகை ஒரு மங்கையாக உருவகிக்கப்பட்டுள்ளது.
ரங்கநாதரே, பாதுகையை தேவியாகவே பாவித்து உணர்ந்ததாகப் பாடப்பட்டுள்ளது. தேவியாகப் பாவிக்கப்பட்ட பாதுகை கங்கையை விடவும், சீதையை விடவும் உயர்ந்த அந்தஸ்துள்ளது என்றும் சிவன், நான்முகனை விட மேன்மையானது என்றும் குறிப்பிடுவது பக்தியின் உச்சம்.
ராமனை விட, பாதுகாதேவியே உயர்ந்தவள் என்று கருதியே பரதன் அவற்றை நாடாள எடுத்துச் செல்வதாக உரைப்பது பாதுகையின் மேன்மையை உணர்த்துகிறது. எண்ணற்ற திருத்தலங்கள் இருப்பினும், ஸ்ரீரங்கத்தில் மட்டுமே விக்கிரகத்தில் ரங்கநாதர் பாதுகையோடு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுலோகங்கள் பலவும், தேசிகர் நெகிழ்ந்த உள்ளத்தோடு பாதுகையை விளித்துப் பேசுவது போல அமைந்திருக்கின்றன. பாதுகையைத் திருமாலுக்கு இணையாகவே கூறி, பாடப்பட்டுள்ள சுலோகங்களுக்கு ராமாயணக் கதைகளையும், புராணக் கதைகளையும் சுட்டி விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. ஆழ்ந்த இறை சிந்தனையாளர்களுக்குப் பரவசம் தரும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு