தமிழில் உள்ள சமய நுால்களில் ஒன்றான அபிராமி அந்தாதியின் சிறப்புகளை விவரிக்கும் நுால். மொத்தம், 25 தலைப்புகளில் பாடல்களை விளக்கும் கட்டுரைகள் உள்ளன. உவமைகளை எடுத்துக்காட்டி, சமய கருத்துக்களை விளக்குகிறது.
தேவாரம், திருவாசகம் நுால்களில் உள்ள கருத்துக்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ‘என் குறை தான்’ என்ற தலைப்பில், ‘உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லாம்; உடம்பினால் உத்தமனைக் காண்’ என்ற பாடல் சிறப்பாக பொருள் தரப்பட்டு உள்ளது. இதற்கு, ‘அம்பிகையின் திருக்காட்சி பெற, இந்த உடலைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதை மறந்து, வாழ்நாளை வீணாக கழிக்கக்கூடாது’ என விளக்கம் சொல்கிறது.
இன்ப வாழ்வு, அன்னையின் கருணை, இம்மையும் மறுமையும், அனுபவ அதிசயம் போன்ற தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. வாழ்வை மையப்படுத்திய விளக்கங்கள், நெறியுடன் வாழ்வதை உறுதி செய்கிறது. சமயம் வழியாக, வாழ்வை செம்மையாக்கிக் கொள்ள விரும்புவோர் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்