மாணிக்கவாசகர், திருவாசகத்தில் பயன்படுத்திய 37 உவமைகளின் நுட்பத்தையும், பொருள் ஆழத்தையும் விளக்கும் வகையில் அமைந்துள்ள நுால். எளிமையான உவமைகள் எனினும் பயன்படுத்திய இடமும், பொருள் ஆழமும் அளவிடற்கரியதாக உள்ளன.
இதில், ‘கற்றா மனமென’ என்பதை பசு, கன்றை காணாதபோது மனம் பதைபதைப்பது போல, இறைவனைப் பிரிவதால் ஏற்படும் துயரை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. நெஞ்சம் துடிதுடித்து மேல் கீழாக விழுந்து வணங்கும் அடியவர்களை, ‘பள்ளத் தாழுறு புனல் போல’ என்ற உவமையை சொல்லி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இது போல், மத்தினில் அகப்பட்ட தயிர் போல்... நச்சு மாமரம் ஆயினும் கொலார்... கொம்பரில்லா கொடி போல... போன்ற உவமைகளுக்கு, நவிலும் நயவுரை படித்து இன்புறத்தக்கதாக உள்ளது. கா.சு.பிள்ளையின் விளக்க உரை, திருவெம்பாவையில் இடம் பெற்ற உவமைகள், திருமந்திரத்தில் திருமூலர் எடுத்தாண்ட உவமைகளை ஆங்காங்கே ஒப்புமைப்படுத்தி விளக்கியிருப்பது, சைவத் திருமுறையில் ஆழ்ந்த புலமையை வெளிக்காட்டுகிறது.
துவக்கத்தில், மாணிக்கவாசகரின் சுருக்கமான வரலாறும், இறுதியில் ‘ஓர் ஆன்மாவின் புலம்பல்’ என்ற தலைப்பில் ஆழமான வினாக்களை எழுப்பியுள்ளதும் சிறப்பாக உள்ளது.
– புலவர் சு.மதியழகன்