வாழ்க்கையில் சந்திக்கும், கேள்விப்படும் விஷயங்களை அழகிய கதைகளாக அமைத்துள்ள நுால். மொத்தம் 10 கதைகள் உள்ளன. தந்தையை வயதான காலத்தில் பிள்ளைகள் கைவிட்டாலும், அவரால் கல்வி பெற்ற இளைஞர் பார்த்துக் கொள்ளும் செய்தியை, ‘எனக்கு மட்டும்’ என்ற கதை எழிலுடன் பதிய வைக்கிறது.
உடல் ஊனம் என்பது முன்னேற்றத்துக்கு ஒரு பொருட்டே இல்லை என ஒரு கதை விளக்குகிறது. பெண்ணை ஒருதலையாக காதலிக்கும் இளைஞன், அவள் சம்மதிக்காததால் கொலை செய்ய திட்டமிடுகிறான்.
அதே நேரத்தில், அவன் தங்கைக்கு, பள்ளியில் ஒரு சிறுவன் காதல் தொல்லை கொடுப்பதை அறிந்து கோபப்படுகிறான். அவனை நல்வழிப்படுத்துவதை ஒரு கதை வலியுறுத்துகிறது. மரணம் வாழ்க்கையில் வரும் ஒரு சம்பவம் என்பதை விவரிக்கிறது, மற்றொரு கதை. சில இடங்களில், ஆசிரியர் இடையில் கருத்தை பேசுவது போல அமைந்துள்ளது. கதைகள் பலவிதங்களில் திருப்பங்களுடன் அமைந்து உள்ளன. வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளை கதையாக தரும் நுால்.
– முகில் குமரன்