‘இதற்காகத்தானா மெனக்கெட்டாய் தமிழா’ என்ற தலைப்பில், ‘தினமலர்’ நாளிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நுால். பண்டை காலத்தில் தமிழர்கள் நீர் மேலாண்மையை கையாண்ட விதம், நீர் பங்கீடு செய்வதற்கான அமைப்புகள், கட்டுமானங்கள் ஆகியவற்றின் பெயர்கள் ஆதாரங்களுடன் தரப்பட்டுள்ளன. கொங்கு நாட்டின் கீழ் பகுதி பாதிக்கும் என்பதால், மேல் பகுதியில் அணை கட்ட வேண்டாம் என்ற சிந்தனை இருந்ததையும் தெரிவித்துள்ளார்.
பண்டை காலத்தில் குளங்கள், கண்மாய்கள் எவ்வாறு பராமரிக்கப்பட்டன; மேலாண்மை செய்யப்பட்டன என்பது குறித்த தகவல்கள் பல ஆராய்ச்சி நுால்களில் வெளிவந்துள்ளன. இருப்பினும் கிணறுகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டன என்னும் விபரம் இதில் கொடுக்கப்பட்டு உள்ளது.
மழை நீரை சேகரிக்க சுரங்க நீர்த்தேக்க தொட்டிகள் நீரேற்றம் செய்தல் போன்ற தொழில்நுட்ப ஆலோசனைகள் குறித்த செய்திகள், தற்போதுள்ள நீர் தேவை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஆலோசனைகளாக அமைந்துள்ளன. அறிவியல் பார்வையிலும் முக்கியமான விபரங்களை அளித்துள்ளது.
– இரா.சுப்பிரமணியன்