மனித இனம் உணவு தேவைக்காக வேளாண்மைத் தொழிலை துவக்கியது உள்ளிட்ட செய்திகளை, ஆதாரங்களுடன் அளித்துள்ள ஆய்வு நுால். வேளாண்மைத் தொழிலின் வளர்ச்சி நிலைகளும் கூறப்பட்டு உள்ளன.
சங்க இலக்கியங்களில் விவசாயம் குறித்து வரும் பாடல்களைப் பட்டியலிட்டு, வேளாண்மையின் அவசியம் குறித்த விபரங்களை தருகிறது. வேளாண்மைத் தொழிலை முதலில் கண்டுபிடித்தது பெண்கள் என்ற செய்தி வியப்பாக உள்ளது. அதற்கான சில ஆதார தகவல்களையும் கூறியுள்ளது.
வேளாண்மை தொடர்பான செய்திகள் நாட்டுப்புறப் பாடல்கள், ஏர் பாட்டு, வண்டிப்பாட்டு போன்ற இலக்கியங்கள் வாயிலாக கூறப்பட்டுள்ளன. வேட்டையாடி உணவு சேகரித்தது, கால்நடைகள் வளர்க்கத் துவங்கியது, பின் உழவு முறையாக மாறிய தகவல்கள் உள்ளன.
தொல்காப்பியம் போன்ற இலக்கண நுால்களிலும், எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டிலும் கூறப்பட்டுள்ள வேளாண் குறித்த செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடவுள் வழிபாடு, வளமைச் சடங்கு, இயற்கை வழிபாடு குறித்த தகவல்கள் அடங்கியுள்ளன. விவசாய வரலாறு, அதன் அவசியம் குறித்து விளக்கும் ஆய்வு நுால்.
–
முகில் குமரன்