உணவு அறிவை செழிமையாக்கும் ஊட்டச்சத்து களஞ்சிய நுால். நான்கு பெருந்தொகுதிகளாக வெளியிடப்பட்டு உள்ளது. கெட்டுப்போன, சத்து நீக்கிய உணவே, பல நோய்களுக்கு காரணமாகிறது. தீங்கு விளைவிக்கும் ரசாயனப் பொருட்களை உணவில் கலப்பது, உணவுப் பொருட்களில் இயல்பாக உள்ள சத்துக்களை நீக்கிய பின் பயன்படுத்துவது போன்ற செயல்களும், உடல்நலன் குன்ற காரணமாகின்றன.
இதற்கு முக்கிய காரணம், சத்துணவு பற்றிய அறிவும், விழிப்புணர்வும் இன்மை தான். உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்களை அறிந்து, அதற்கேற்ப உண்ணும் நடைமுறை இல்லை. தமிழில் ஊட்டச்சத்து அறிவு நுால் இல்லாத நிலை நிலவியது. அந்த வெற்றிடத்தை நிரப்புகிறது இந்த நுால். உணவு மற்றும் ஊட்டச்சத்து சார்ந்து பதிப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள அடிப்படை பார்வை நுால்களில் உள்ள தகவல்களும் இடம் பெற்றுள்ளன. தனி மனிதருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்தின் புதிய அளவு முறைகளும் தரப்பட்டுள்ளன. இந்தியாவில், 528 மூல உணவுகளில் உள்ள சத்துக்களை பகுத்து, விபர அட்டவணையாகத் தரப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் உழைப்பில் வெளிவந்துள்ளது. உணவு மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த பார்வை நுாலாக பயன்படுத்த ஏற்றது. உணவு சார்ந்து தமிழில் வெளிவந்துள்ள அறிவு நுால்.
–
மலர்