இரண்டு குறுநாவல்கள் ஒரே புத்தகமாக வந்துள்ளது. முதல் குறுநாவல் விழிகளின் விளையாட்டு. எதிர்பாராத நம்ப முடியாத திருப்பங்களுடன் கதையை நடத்திச் செல்கிறார். இந்தியா, எகிப்து என்று கதை எங்கெங்கோ பறக்கிறது.
‘உங்க பணத்தை யாராவது திருடினால் எவ்வளவு கஷ்டமாக இருக்கும். அது மாதிரி தானே பறிகொடுத்தவங்க மனசு பாடுபடும்...’ இது, திருடனுக்கு சொல்லும் புத்திமதி. ஒரு வர்ணனை மிகவும் அபாரமாக உள்ளது. எகிப்து இளவரசியின் அழகு வர்ணிக்கப்படுகிறது. பொறாமை கொள்ளும் அழகு திறமைமிக்க எழுத்தாக மலர்ந்துள்ளது.
லினன் துணி எகிப்தில் வளரும் ஒரு செடியின் தண்டு பாகத்தில் இருந்து உருவாக்கப்படுகிறது. திருமணங்களில் வட்ட வடிவ மோதிரம் போடுவதற்கு காரணம், முடிவில்லா இன்பத்துடன் இணைந்து வாழ வேண்டும் என்பதற்காகவே போன்ற செய்திகள் உள்ளன. பொழுதுபோக்க உதவும் குறுநாவல் தொகுப்பு நுால்.
–
சீத்தலைச் சாத்தன்