மனித உணர்வுகளை சொல்லுகின்ற கதை. அப்பா, மகன் உறவு வெகு யதார்த்தமாக சொல்லப்பட்ட விஷயம். எந்த தலைமுறையாக இருந்தாலும் தந்தை, மகன் பிரச்னைக்கு தீர்வு கிடையாது என்பதை விவரிப்பது சுவையான உணர்வு.
வாயும், இதயமும் எல்லாருக்கும் எல்லா நேரமும் ஒண்ணா இருக்காது என்பதற்கு தந்தை, மகன் உரையாடல் ஒரு சோறு பதமாக சொல்லலாம். மெத்த படித்த சீனியர் சிட்டிசன்களின் வடிகால் வங்கி என்பது ஓங்கி உச்சந்தலையில் அறைவது போல சொல்லப்பட்டிருக்கிறது.
கதையில் காதலைக் காணோமே என்று யோசிக்கும் நேரத்தில், எழுத்தாளரான வங்கி குமாஸ்தா அருண்குமார் கனவில் காதல் வருகிறது. அந்த காதல் உடையும் நேரத்தில் மனோதத்துவ டாக்டர் காதல் சோகத்திற்கு சிகிச்சை அளிக்கிறார். அங்கே உண்மைக் காதலை சொல்கிறான்.
அந்த மனோதத்துவ நிபுணரும் வெற்றியடைந்த தன் உண்மைக் காதலை பகிர்ந்து கொள்கிறார். இப்போது அருண்குமாருக்கும் நம்பிக்கையூட்டுகிறார். அந்த நம்பிக்கை உண்மையாகிறதா என்பதை கதையை முழுதும் படித்து தெரிந்து கொள்ளலாம். அனைவரும் படிக்க வேண்டிய குடும்பக் கதை.
–
எம்.எம்.ஜெ.,