காதல் கதை என்று ஆரம்பிக்கப் பட்டாலும் மனித உணர்வுகளை சொல்லுகின்ற கதை. அப்பா – மகன் உறவு வெகு யதார்த்தமாக சொல்லப்பட்டு உள்ளது. வாயும், இதயமும் எல்லா நேரமும் ஒன்றாக இருக்காது என்பதற்கு தந்தை – மகன் உரையாடலை சொல்லலாம்.
மெத்த படித்த சீனியர் சிட்டிசன்களின் வடிகால் வங்கி என்பது ஓங்கி உச்சந்தலையில் அறைவது போல சொல்லப்பட்டிருக்கிறது. மனிதர்களுக்காக ஏங்கும் மனங்களின் புலம்பல் வேதனை தரும். கதையில் காதலைக் காணோமே என்று யோசிக்கும் நேரத்தில் வங்கி குமாஸ்தா அருண்குமார் கனவில் காதல் வருகிறது. அது உடையும் நேரத்தில் மனோதத்துவ டாக்டர் காதல் சோகத்திற்கு சிகிச்சை அளிக்கிறார்.
மனோதத்துவ நிபுணர் வெற்றியடைந்த காதல் கதையை பகிர்கிறார். அந்த நம்பிக்கை உண்மையாகிறதா என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளலாம். சினிமாக் காதலாக இல்லாமல் நிஜக் காதலைப் போல மவுனத்தில் நிரம்பி வார்த்தைகளுக்கு திரையிட்டு வாழ்ந்து காட்டியிருக்கிறது குடும்பக் கதை.
– எம்.எம்.ஜெ.