‘தினமலர்’ நாளிதழில் வெளியான ‘என் பார்வை’ என்ற பல்துறை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். அண்மையில் மறைந்த எழுத்தாளர் இளசை சுந்தரத்தின் கடைசி நுால். முன்னுரையிலேயே ‘நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கையை விதைக்கிறார். காலம் எனும் சிற்பி நம்மை செதுக்கிக் கொண்டிருக்கிறான். அதில் தாம் சிற்பமா... இல்லை சிதறி விழும் கற்களா? சிற்பமாக வேண்டுமானால் சாதனை செய்ய வேண்டும். பூமியை படுக்கையாக்குவதும், பாதையாக்குவதும் நம் கையில் தான் உள்ளது.
எல்லா பறவைகளுக்கும் உணவை படைத்து இருக்கிறான் இறைவன். ஆனால், கூடுகளுக்கு வந்து கொடுப்பதில்லை. பறவைகள் தேடிச் சென்று தான் பெற்றுக் கொள்ள வேண்டும். அது போல தேடிப் பெற வேண்டும் என எடுத்துக் கூறுகிறார்.
முயற்சியின் விதைகள் முளைக்கத் துவங்கி விட்டால், வெற்றியின் விளைச்சல் நிச்சயம் உண்டு எனும் வைர வரிகளால், உற்சாகம் எனும் அருமருந்தை ஊட்டுகிறார். மனோபலம், நம்மால் முடியும் எனும் நம்பிக்கை, நேர நிர்வாகம், உற்று கவனித்தல், எதையும் முழுமையாக செய்தல், மனச்சோர்வு நீக்கும் வெற்றியாளர்களின் மந்திரச் சொற்கள் என சிந்தனை முத்துக்களால் தொகுக்கப்பட்ட களஞ்சியம்.
–
ஆனந்தம்