மகிழ்ச்சி, சோகம், கோபம், ஆச்சர்யம், தோழமையை வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு நுால். பார்த்த சம்பவங்களை எண்ண ஓட்டத்தில் விட்டு படைக்கப்பட்டுள்ளது. பூவை உதிர்த்து, சருகை நகர்த்தி, மரத்தை முறிக்கும் காற்றாய் வாழ்க்கை அமைவதை அசை போடுகிறது. அசைவற்ற முனிவராய் வர்ண தேவதை இருப்பதை வர்ணிக்கிறது.
மயிரிழையில் ஆடிக் கொண்டிருக்கும் நினைவாக கவிதையை சொல்கிறது. பெண் உடலில் மதம், ஜாதி பார்ப்பதில்லை என படுக்கை வியாபாரத்தை சாடுகிறது. நிராயுதபாணியென எண்ணி போர் தொடுக்கும் இனவெறிக்கு எச்சரிக்கை விடுத்து சுயமரியாதை பேசுகிறது. தனிமையின் புலம்பலை அலசுகிறது.
கறைபடிந்த மனங்களால் உடைந்த, இருமனங்களின் குமுறலை பேசுகிறது. தனிமை துயரங்களை விருப்பமுடன் விட்டொழிக்க கூறுகிறது. யாக்கை, பகழி, பலகணி போன்ற பழந்தமிழ் சொற்கள், கவிதையில் இடம் பிடித்து புத்துயிர் கொடுக்கின்றன. கவிதை, பாடல் எழுத துடிப்போருக்கு உதவும் நுால்.
–
டி.எஸ்.ராயன்