நிகழ்வுகளின் கவிதை தொகுப்பு நுால். சமூகம், இயற்கை, அரசியல், கட்டமைப்புகள் என, அன்றாடம் பார்த்த, கேட்ட விஷயங்களை படைத்து உள்ளது. மழை மரத்தில் விழுந்து, பின் சொட்டு நீராக பூமியில் விழுவதை அழகாய் வர்ணிக்கிறது. கடல், மலை கடந்து என்ன இருக்கும் என யோசிக்க வைக்கிறது.
கல் மண்டப உச்சியில், மடியில் அமரும் குட்டி குரங்குக்கு பழம் ஊட்டும் தாய் குரங்கின் பாசத்தை நின்று ரசிக்கச் சொல்கிறது. கூரையை பெயர்த்து கொட்டுவதாக, குழந்தையின் சிரிப்பு மழையை பொழிகிறது.
தெரு நாயின் காயத்திற்கு மருந்தாற்றுவதை ஆறுதல் அடையச் சொல்கிறது. வில்லுப்பாட்டு கலைஞரின் வாழ்க்கையை, ‘சர்வேசா போதும்’ என பேசச் சொல்கிறது. மூதாட்டியின் வீட்டை ஆறடியில் அளக்க வைக்கிறது. தெப்பக்குளத்தின் இரைச்சலை மெல்லிசையாக கேட்கச் சொல்கிறது. சென்ட்ரல் ரயில் நிலையம், நள்ளிரவு துாங்குவதை விழித்து பார்க்க வைக்கிறது. ஒவ்வொரு கவிதையும், சமூகத்தை அலசி விவரிக்கின்றன.
–
டி.எஸ்.ராயன்