குறிஞ்சிப்பூ போல் பூக்கும் குறுங்கவிதைகளின் தொகுப்பு நுால். கண்களை நேசிப்பதால், கண்ணீரையும் சேர்த்து நேசிக்க வேண்டும் என, அன்பை மிக ஆழமாக சொல்கிறது.
பெண்களின் பிறந்த நாளுக்காக, கூடுதலாக பூக்கிறது செடி என, பெண்மையை பல மடங்கு போற்றுகிறது. பெண் அழுதால், அதை சாதகமாக்கி ஆண் தொடுவான் என, ஆதரவற்றவர்களை நாசுக்காக எச்சரிக்கிறது. சிற்பிகள் பிழைக்க, சிலையாக இருக்க கடவுள் சம்மதிப்பதாக கற்பனை திறனை வடிக்கிறது.
பின்னால் வருவோருக்கு வழி விட, அலைகளை பார்த்து கற்கச் சொல்கிறது. வேர்களுக்கு நன்றி சொல்ல, பூமிக்குள் திரும்பும் சருகின் தியாகத்தை கூறுகிறது. ஆதி மனிதன் முகம் பார்த்த கண்ணாடி என, தெளிந்த தண்ணீரை சுட்டிக்காட்டுகிறது.
சுவாரசியம் மிக்க கவிதை நுால்.
– டி.எஸ்.ராயன்