நுாலாசிரியரின் ஐந்தாவது புத்தகம் இது. ஏற்கனவே, ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., சாதனையாளர்களின் வெற்றி கதை குறித்து நுாலாசிரியர் எழுதிய புத்தகத்தின் தாக்கம் இன்னும் இளைஞர்கள் மத்தியில் குறையவில்லை. இந்த நிலையில் இப்புத்தகத்தை அழகு நடையில் எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
கலெக்டராக பணிபுரியும், 15 பெண்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆனது எப்படி என்பது குறித்து தனித்தனி கட்டுரைகளாக உள்ளன. ஒவ்வொருவரிடமும் பேட்டி கண்டு தகவல்கள் அழகாக தொகுக்கப்பட்டுள்ளன.
ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் முயற்சித்து வருவோருக்கு இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் பாடம். ஒருபுறம் குடும்ப தலைவி, மறுபுறம் ஆட்சித் தலைவி, அரசு துறை தலைவி என, பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் வாழ்க்கையை அழகாக கண் முன்னே நிறுத்துகிறது.
ஐ.ஏ.எஸ்., தேர்வில் எப்படி வெற்றி பெற்றோம், நேர்முகத்தேர்வை எப்படி எதிர்கொண்டோம், விருப்பப்பாடம் தான் வெற்றியை நிர்ணயிக்கிறது என்பது போன்று வெற்றிக்கதைகளை, ‘ஆட்சித்தலைவியர்’ சொல்கின்றனர். இது, ஐ.ஏ.எஸ்., தேர்வு பற்றி சிந்திக்காதவர்களையும் அந்த பாதைக்கு செல்ல துாண்டும்.
தேர்வு எழுதுவோருக்கு, ‘டிப்ஸ்’ தந்தும் ஆட்சித்தலைவியர் அசத்தி உள்ளனர். ஒவ்வொருவரும் வெற்றிக்கனியை பறித்த கதை வித்தியாசமாக உள்ளது. ஒன்றுக்கொன்று வேறுபட்டுளளது. இதுவே இந்த நுாலின் சிறப்பு.
எக்காலத்திற்கும் பொருந்தும் தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றத்திற்கான புத்தகம் இது. ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற விரும்பும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அதற்கு தயாராகி வரும் இளைஞர்களுக்கு ஒரு அற்புத பொக்கிஷம்!
– ராம்ஸ்